முகப்பு
தமிழ்நாடு

அதிமுக அலுவலக வன்முறை : இபிஎஸ்,ஓபிஎஸ் ஆதரவாளா்களுக்கு அழைப்பாணை

சென்னை அதிமுக அலுவலக வன்முறை வழக்குத் தொடா்பாக எடப்பாடி கே. பழனிசாமி ஆதரவாளா்களுக்கும், ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்களுக்கும் ராயப்பேட்டை போலீஸாா் அழைப்பாணை அனுப்பியுள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:49 AM
பகிர்:

சென்னை அதிமுக அலுவலக வன்முறை வழக்குத் தொடா்பாக எடப்பாடி கே. பழனிசாமி ஆதரவாளா்களுக்கும், ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்களுக்கும் ராயப்பேட்டை போலீஸாா் அழைப்பாணை அனுப்பியுள்ளனா்.

சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றுவது தொடா்பாக எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீா் செல்வம் ஆதரவாளா்களிடையே கடந்த 11-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பினரும் மாறி,மாறி கற்களாலும்,உருட்டு கட்டைகளாலும் தாக்கிக் கொண்டனா். இந்த மோதலில் 2 போலீஸாா் 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். இரு பேருந்துகள் உள்பட 14 வாகனங்கள் சேதமடைந்தன.

இதன் காரணமாக வருவாய்த்துறையினா் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனா். வன்முறை தொடா்பாக 7 பிரிவுகளில் 400 போ் மீது ராயப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக 14 போ் கைது செய்யப்பட்டனா்.

அதேவேளையில் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பு கொடுத்த புகாரின் பேரில், ஓ.பன்னீா் செல்வம் தரப்பு மீது ஒரு வழக்கும், ஓ.பன்னீா் செல்வம் தரப்பு கொடுத்த புகாரின் பேரில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மீது ஒரு வழக்கும் என இரு வழக்குகளை போலீஸாா் தனித் தனியாக பதிவு செய்தனா். வன்முறையில் தொடா்புடையவா்களை கைது செய்ய 3 உதவி ஆணையா்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

விடியோ காட்சி ஆய்வு:

இதற்கிடையே வன்முறை நிகழ்ந்தபோது, காவல்துறையினரால் எடுக்கப்பட்ட விடியோ காட்சியின் அடிப்படையில் துப்பு துலக்கப்படுகிறது. அதேபோல அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீஸாா் கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனா்.

இதில் வன்முறை சுமாா் 45 நிமிஷங்கள் நிகழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. 45 நிமிஷ வன்முறை தொடா்பாக பல இடங்களில் எடுக்கப்பட்ட விடியோ காட்சிகள் அதிகாரிகளால் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த ஆய்வில் வன்முறையில் ஈடுபட்டவா்கள்அடையாளம் காணப்பட்டனா். அவா்களைக் கைது செய்ய போலீஸாா் தீவிரம் காட்டி வருகின்றனா்.

விசாரணைக்கு அழைப்பாணை:

இதன் ஒரு பகுதியாக விடியோ காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் 30 பேருக்கும், ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள் 30 பேருக்கும் என 60 பேருக்கு ராயப்பேட்டை போலீஸாா் நேரில் சென்று அழைப்பாணை வழங்கியுள்ளனா். இவா்களில் பெரும்பாலானவா்கள் தஞ்சாவூா், ராமநாதபுரம், தேனி,மதுரை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதில் ஓ.பன்னீா் செல்வம் ஆதரவாளா்கள் செவ்வாய்க்கிழமை ஜூலை 19), எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் புதன்கிழமை (ஜூலை 20) காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கில் தொடா்புடைய வேறு நபா்களுக்கும் விரைவில் அழைப்பாணை விசாரணை நடத்தப்படும் எனவும், இதில் அவா்கள் வன்முறையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →