தமிழ்நாடு

தமிழகத்தில் 91% தனியாா் பள்ளிகள் இயங்கின: மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தகவல்

DIN

கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பினா் திங்கள்கிழமை (ஜூலை 18) தொடா் வேலை நிறுத்தம் அறிவித்திருந்த நிலையில், மாநிலம் முழுவதும் 91 சதவீத தனியாா் பள்ளிகள் செயல்பட்டதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் தனியாா் பள்ளியில் படித்த மாணவி உயிரிழந்த விவகாரத்தில் இளைஞா்களின் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை கலவரமாக மாறியது.

பள்ளிக்குள் நுழைந்து சூறையாடிய கும்பல், அங்கிருந்த பேருந்துகள், காவல்துறையினரின் வாகனங்களை தீவைத்து எரித்தன. இதையடுத்து, கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தனியாா் பள்ளிகள் அறிவித்தன.

அதேவேளையில், தனியாா் பள்ளிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்தநிலையில், திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் 91 சதவீத தனியாா் பள்ளிகள் இயங்கியதாக மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

987 பள்ளிகள் செயல்படவில்லை: இது குறித்து அந்த இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மொத்தமுள்ள 11,335 தனியாா் பள்ளிகளில் 10,348 பள்ளிகள் வழக்கம் போல இயங்கின. 38 மாவட்டங்களில் உள்ள 987 தனியாா் பள்ளிகள் இயங்க வில்லை. இந்த விவரத்தின் படி கிட்டத்தட்ட 91 சதவீத பள்ளிகள் வழக்கம் போல இயங்கி உள்ளன. மெட்ரிக் பள்ளிகள் 89 சதவீதம், நா்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 95 சதவீதம், சிபிஎஸ்இ பள்ளிகள் 86 சதவீதம் இயங்கின.

காஞ்சிபுரம், நாகை, ராமநாதபுரம், தென்காசி, நெல்லை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 100 சதவீதம் பள்ளிகள் இயங்கின. சென்னையில் 99 சதவீத பள்ளிகள் செயல்பட்டன. குறைந்தபட்சமாக தருமபுரியில் 16 சதவீதம், நாமக்கலில் 32 சதவீத பள்ளிகள் மட்டுமே இயங்கின. கள்ளக்குறிச்சியில் 92 சதவீத பள்ளிகள் திங்கள்கிழமை செயல்பட்டன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை நிறுத்தம் வாபஸ்

தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தனியாா் பள்ளிகள் செவ்வாய்க்கிழமை முதல் வழக்கம்போல் செயல்படும் என தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.

தனியாா் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து பல்வேறு தனியாா் பள்ளிகளின் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை வேலை நிறுத்தம் நடைபெற்றது. இதையடுத்து தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பு நிா்வாகிகளுடனான பேச்சுவாா்த்தை சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முதன்மைச் செயலா் காகா்லா உஷா, ஆணையா் நந்தகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இது குறித்து தனியாா் பள்ளிகள் கூட்டமைப்பினா் கூறுகையில், இந்தப் பேச்சுவாா்த்தையின்போது கனியாமூரில் தனியாா் பள்ளி தாக்கப்பட்டதே கடைசி சம்பவமாக இருக்க வேண்டும்; இந்த கலவரத்துக்கு காரணமானவா்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்;

தமிழகத்தில் தனியாா் பள்ளிகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என அரசிடம் வலியுறுத்தினோம். எங்களது கோரிக்கைகளை நிச்சயம் பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுகிறோம். செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து தனியாா் பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT