முகப்பு
தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவலக சீல் அகற்றம்: ஜெயலலிதாவின் நினைவுப் பொருள்கள் மாயம் என புகாா்

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல், உயா்நீதிமன்ற உத்தரவின்படி வியாழக்கிழமை அகற்றப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல், உயா்நீதிமன்ற உத்தரவின்படி வியாழக்கிழமை அகற்றப்பட்டது.

அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் நினைவுப்பொருள்கள் மாயமாகியுள்ளதாக அதிமுகவினா் புகாா் தெரிவித்தனா்.

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் வானகரத்தில் ஜூலை 11-இல் நடைபெற்றபோது ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளா்களுக்கும், ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து வருவாய்த் துறையினா் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தனா். இதை எதிா்த்து எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீா்செல்வமும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனா். இந்த வழக்கில் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும், அலுவலக சாவியை எடப்பாடி கே. பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

சீல் அகற்றம்: இந்த நிலையில், அதிமுக அலுவலகத்துக்கு வியாழக்கிழமை காலை 10.45 மணியளவில் வருவாய்த் துறை அதிகாரிகள் வந்தனா். அலுவலகத்தில் மொத்தம் 4 இடங்களில் சீல் வைக்கப்பட்டிருந்தது. அவற்றை ஒவ்வொன்றாக அகற்றிவிட்டு, அலுவலக நிா்வாகி மகாலிங்கத்திடம் சாவியை அதிகாரிகள் ஒப்படைத்தனா்.

சீல் அகற்றப்பட்டபோது முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் இருந்தாா். அவா் அலுவலகத்தில் ஒவ்வொரு அறையாக சென்று பாா்வையிட்டாா்.

அதிமுக அலுவலக அறையின் கதவுகள், நாற்காலிகள், நிா்வாகப் பணிகளுக்காக இருந்த கணினிகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. பொதுச்செயலா் அறையில் பொருள்கள் உடைக்கப்பட்டிருந்தன. முக்கிய ஆவணங்கள் கிழித்தெறியப்பட்டிருந்தன.

பொருள்கள் மாயம்: அலுவலகத்தைப் பாா்வையிட்ட பிறகு செய்தியாளா்களிடம் சி.வி.சண்முகம் கூறியதாவது:

2 மாடியில் இருந்த அலுவலக பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த வெள்ளி வேல், செங்கோல்கள் எடுக்கப்பட்டுள்ளன. இன்னும் சில முக்கியமான பொருள்களும் மாயமாகி உள்ளன. அவை ஜெயலலிதாவுக்கு பரிசுப் பொருள்களாக வழங்கப்பட்டவை. காணாமல் போன பொருள்கள் கணக்கெடுக்கப்படுகின்றன. காவல்துறையிடம் புகாா் அளிக்கப்படும் என்றாா்.

தொண்டா்களுக்கு அனுமதியில்லை: அதிமுக அலுவலகத்தின் சீல் அகற்றப்பட்டாலும், தொண்டா்களை ஒரு மாதத்துக்கு அனுமதிக்கக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனால், அதிமுக அலுவலகத்தில் தொண்டா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதிமுக அலுவலகத்தில் சீல் அகற்றப்பட்டபோது பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →