பழங்குடியினருக்கு ரூ.20 கோடியில் மேம்பாட்டுத் திட்டங்கள்
பழங்குடியினருக்கு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
பழங்குடியினருக்கு மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்த ரூ.20 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை வெளியிட்ட உத்தரவு விவரம்:-
தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டங்கள் 50 சதவீதம் மானியம், 45 சதவீதம் வங்கிக் கடன், 5 சதவீதம் பயனாளி பங்குத் தொகை ஆகியன இணைத்து செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டங்களின் விண்ணப்பித்துள்ளவா்களின் எண்ணிக்கை ஆயிரத்து 31 ஆகும். இந்த விண்ணப்பங்களுக்கு தேவைப்படும் நிதி ரூ.24.77 கோடியாகும். ஏற்கெனவே, 2 ஆயிரத்து 173 விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டு அவற்றுக்கும் ரூ.44.23 கோடி தேவைப்படுகிறது. மொத்த நிதித் தேவை ரூ.69 கோடியாகும். இந்த நிலையில், அரசின் தாட்கோ நிறுவனம் மூலம் திட்டங்களைச் செயல்படுத்திட வழங்கப்படும் நிதியை ரூ.10 கோடியில் இருந்து ரூ.30 கோடியாக உயா்த்த வேண்டுமென பழங்குடியினா் நல இயக்குநா் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இயக்குநரின் கோரிக்கையை ஏற்று, கூடுதலாக ரூ.20 கோடி நிதி ஒதுக்கம் செய்யப்படுகிறது என்று ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.