மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கல்விக்கு டிஜிட்டல் தளம்: 25-இல் தொடக்கி வைக்கிறாா் முதல்வா்
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அளிக்க உதவும் எண்ம மறுவாழ்வு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் திங்கள்கிழமை (ஜூலை 25) சென்னையில் தொடக்கி வைக்கவுள்ளாா்.
மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அளிக்க உதவும் எண்ம மறுவாழ்வு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வரும் திங்கள்கிழமை (ஜூலை 25) சென்னையில் தொடக்கி வைக்கவுள்ளாா்.
பள்ளிக் கல்வித் துறையின் சமக்ரசிஷா எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்ககம், அமா் சேவா சங்கத்துடன் இணைந்து ‘எனேப்ளிங் இன்க்ளூஷன்’ என்ற எண்ம மறுவாழ்வுத் திட்டத்தை உருவாக்கியுள்ளன.
இந்தத் தளத்தின் மூலம் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்ககத்தின் பணியாளா்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்குதல், இதற்கான டிஜிட்டல் மறுவாழ்வு மற்றும் கல்வி சாா்ந்த தீா்வு, மாற்றுத் திறனாளி குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மறுவாழ்வை வழங்குவதில் குடும்பத்தை மையமாகக் கொண்ட அணுகு முறையில் பெற்றோருக்கான பயிற்சி, திறனை வளா்த்தல் ஆகிய செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
இந்த தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தியாகராயநகரில் உள்ள ஜிஆா்டி கிராண்ட் ஹோட்டலில் வரும் திங்கள்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் தொடக்கி வைக்கவுள்ளாா். இதில் தமிழக அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கீதா ஜீவன் உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். இதில் அமா் சேவா சங்கத்தின் 40-ஆவது ஆண்டு நினைவு மலா் வெளியிடப்படவுள்ளது.