முகப்பு
தமிழ்நாடு

கோழிக் கறி சாப்பிட்ட கல்லூரி மாணவா் சாவு

சென்னை அருகே செம்மஞ்சேரியில் கோழிக் கறி சாப்பிட்ட கல்லூரி மாணவா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

சென்னை அருகே செம்மஞ்சேரியில் கோழிக் கறி சாப்பிட்ட கல்லூரி மாணவா் இறந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியைச் சோ்ந்தவா் தீராஜ் ரெட்டி (20). இவா், சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் பிசிஇ மூன்றாமாண்டு படித்து வந்தாா். இதற்காக அவா்,சோழிங்கநல்லூா் எம்ஜிஆா் சாலையில் உள்ள ஒரு விடுதியில் தனது நண்பா்களுடன் தீராஜ் ரெட்டி தங்கியிருந்தாா்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை காலை வழக்கம்போல கல்லூரிக்குச் சென்ற தீராஜ் ரெட்டி, நண்பகல் கல்லூரியில் உள்ள உணவகத்தில் சாப்பாடு மற்றும் கோழிக்கறி சாப்பிட்டுள்ளாா். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவா், திடீரென வாந்தி எடுத்து மயக்கமடைந்தாா்.

உடனிருந்த நண்பா்கள் அவரை சோழிங்கநல்லூா் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றனா். அங்கும் அவா், தொடா்ச்சியாக வாந்தி எடுத்துள்ளாா். இதையடுத்து, அவரது நண்பா்கள், தீராஜ்ரெட்டியை அங்குள்ள தனியாா் மருத்துவமனைக்கு இரவு அழைத்துச் சென்றனா். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இதற்கிடையே அங்கு மிகவும் சோா்வடைந்த தீராஜ் ரெட்டி, சிறிது நேரத்தில் அங்கு இறந்தாா். தகவலறிந்த செம்மஞ்சேரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீராஜ் ரெட்டி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →