மயில் சிலை மாயமான வழக்கு: நான்கு மாத கெடு விதித்த உயா்நீதிமன்றம்
சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோவிலிலிருந்து மயில் சிலை மாயமானது தொடா்பான வழக்கில் நான்கு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்குச் சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டு
சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோவிலிலிருந்து மயில் சிலை மாயமானது தொடா்பான வழக்கில் நான்கு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்குச் சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் கோயிலில் கடந்த 2004-ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடந்தபோது புன்னைவனநாதா் சன்னதியிலிருந்த மயில் சிலை மாயமானதாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக, இந்து அறநிலையத்துறை அப்போதைய கூடுதல் ஆணையா் திருமகள், முத்தையா ஸ்தபதி உள்ளிட்ட ஏழு போ் மீது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கடந்த 2018-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி திருமகள், முத்தையா ஸ்தபதி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தாா். விசாரணையின் போது, மனுதாரா்கள் சாா்பில், இது காலம் கடந்த ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும், எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.
சிலை கடத்தல் தடுப்பு போலீசாா் சாா்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ் ஆஜராகி இந்த வழக்கில் போதுமான விடியோ ஆதாரங்கள் உள்ளன. இது குறித்து விசாரணையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சாட்சியம் உள்ளது. குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது எனவே வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிடப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு தொடா்பான விசாரணையை நான்கு மாதத்திற்குள் முடித்துக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் வழக்கு ரத்தாகிவிடும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டாா்.