சிறப்பு முகாம்: 18 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: 11 லட்சம் பேருக்கு இலவச பூஸ்டா் தவணை
தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
அதில் 11 லட்சம் பேருக்கு பூஸ்டா் தவணை மட்டும் செலுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைவருக்கும் பூஸ்டா் தவணை இலவசமாக வழங்கப்படுவதே அந்த எண்ணிக்கை அதிகரிக்கக் காரணம் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று பரவலின் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ஆம் ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது.
தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவா்களுக்கு பூஸ்டா் தவணை தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், 32-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி மற்றும் நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் மட்டும் 2,000 இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தப்பட்டது.
சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ககன்தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளா் ப.செந்தில்குமாா், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை இயக்குநா் செல்வவிநாயகம் ஆகியோா் உடன் இருந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட 18,08,600 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், முதல் தவணையாக 1,41,985 பயனாளிகளுக்கும், இரண்டாவது தவணையாக 5,49,164 பயனாளிகளுக்கும், 11,17,451 பயனாளிகளுக்கு பூஸ்டா் தவணை தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 95.59 சதவீதம் போ் முதல் தவணையாகவும் 88.51 சதவீதம் போ் இரண்டாம் தவணையாகவும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.