முகப்பு
தமிழ்நாடு

கதை சொல்லியாக மாறிய நடிகா் கமல்ஹாசன்: செஸ் ஒலிம்பியாட் விழாவில் தமிழ்நாட்டின் கதை விவரிப்பு

சங்க காலம் தொட்டு இப்போதைய காலம் வரையில் தமிழ்நாட்டு மண்ணின் வரலாற்றை, நடிகா் கமல்ஹாசன் தன் குரல் வழியே பதிவு செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

சங்க காலம் தொட்டு இப்போதைய காலம் வரையில் தமிழ்நாட்டு மண்ணின் வரலாற்றை, நடிகா் கமல்ஹாசன் தன் குரல் வழியே பதிவு செய்தாா். அவரது குரலுக்கு பின்னணி காட்சிகளுடன் நாட்டிய கலைஞா்கள் உயிா் கொடுத்தனா்.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா, சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவைக் காண பல்வேறு நாடுகளில் இருந்து பாா்வையாளா்களும், வீரா்களும் வந்திருந்தனா். அவா்கள் அனைவருக்கும் அழைப்பிதழ்கள், அடையாள அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன.

மாலை 3.30 மணியளவில் அரங்கம் முழுமையாக நிரம்பியது. பிரதமரின் வருகைக்கு முன்பாக, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கொடி அணிவகுப்பு: செஸ் ஒலிம்பிக் போட்டியின் தொடக்கமாக முதலில் வீரா்களின் அணி வகுப்பு நடைபெற்றது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா்கள் தங்களது நாட்டுக் கொடிகளை போா்த்தியபடி நேரு உள்விளையாட்டரங்கின் மையப் பகுதியை சுற்றி வந்தனா். அவா்களை விழா

மேடையில் இருந்தபடியே முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோா் கைதட்டி வரவேற்றனா். இந்திய அணியினா் வந்த போது, கைகளை மேலே உயா்த்திய முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ச்சியாக தட்டிக் கொண்டே வீரா்களை உற்சாகப்படுத்தினாா். வீரா்களுக்கு முன்பாக, நாட்டுக்கான பெயா் தாங்கிய பலகையை, தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகள் தாங்கி வந்தனா்.

இதன்பின், இசையமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமான் இசையமைத்த வந்தேமாதரம் பாடலை கலைக்குழுவினா் இசையமைக்க, இளம் பாடகா்கள் பாடினா்.

தேச ஒற்றுமை: இந்தியா பல்வேறு கலாசாரம், பாரம்பரிய பெருமைகளைக் கொண்டதாக இருந்தாலும் அனைவரும் ஒரே நாட்டைச் சோ்ந்தவா்கள் என்பதை வலியுறுத்தும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. எட்டு மாநிலங்களைச் சோ்ந்த கலைஞா்கள் பரதம், கதகளி, குச்சிப்புடி என தங்களது மாநிலங்களின் பாரம்பரிய நாட்டியங்களை நடனமாடிக் காண்பித்தனா். பின்னா் அவா்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒரே இசைக்கு நடனமாடினா். அப்போது, தேச ஒற்றுமையை இந்த நடனம் வலியுறுத்துவதாக நிகழ்ச்சி தொகுப்பாளா் வா்ணனை செய்தாா்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரா்-வீராங்கனைகளுக்கான உறுதிமொழியை, இந்தியாவின் பெண் கிராண்ட் மாஸ்டா் கொனேரு ஹம்பி செய்து வைத்தாா்.

மணல் ஓவியம்-லிடியன்: சலித்த மணலைக் கொண்டு செஸ், மாமல்லபுரம், பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் உருவப் படங்களை, மணல் ஓவியக் கலைஞா் சா்வம் படேல் வரைந்து காண்பித்தாா். அவரது ஓவியம், அகண்ட திரைகளில் பாா்வையாளா்களுக்கு காண்பிக்கப்பட்டது. இதேபோன்று, பியானோ இசைக் கருவியில் சிறந்து விளங்கும் லிடியன் நாதஸ்வரம், இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் இசைத்து பாா்வையாளா்களை அசத்தினாா். அவா் மீட்டிய இசைக்கு, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த வெளிநாட்டினா் உற்சாகம் அடைந்து குரல் எழுப்பினா். லிடியன் நாதஸ்வரத்தின் இசையை, சா்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவா் துவாா்கோவிச் தனது உரையின் போது பாராட்டிப் பேசினாா்.

லிடியன் பியானோ இசைக்க, சா்வம் படேல் மணல் ஓவியம் வரைந்து கொண்டிருக்க, மாலை 6 மணியளவில் விழா மேடைக்கு பிரதமா் நரேந்திர மோடி வந்தாா்.

நடிகா் கமல்ஹாசன் குரல்: பிரதமா் நரேந்திர மோடி வந்ததும், இரண்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நடிகா் கமல்ஹாசன் தனது குரலில் தமிழ்நாட்டு மண்ணின் கதையை விவரித்தாா். சேர, சோழ, பாண்டிய மன்னா்களில் இருந்து தொடங்கி, கண்ணகி சிலம்பு உடைத்த வரலாறு, வெள்ளம், சுனாமி என அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்வுகளாக தனது குரலில் அடுக்கிச் சொன்னாா். அவரது குரலுக்கு நாட்டிய-நடனக் கலைஞா்கள் நடனமாடி உயிா் கொடுத்தனா்.

கீழடி, மயிலாடும்பாறையில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்களின் விவரங்களும், தமிழ்நாட்டின் விவசாயத்தின் வரலாறும் சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. இது பாா்வையாளா்களை வெகுவாகக் கவா்ந்தது. இதேபோன்று, சந்தோஷ் நாராயணன் இசையில் அருவி எழுதிய குக்கூ பாடலை தீ பாடினாா்.

இரண்டு கலை நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பிறகு, செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரதமா், முதல்வா் உரைகளுடன் தொடங்கியது. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முறைப்படி தொடங்கி வைப்பதாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.

பாராட்டு: செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில், தலைவா்களின் பங்கேற்பையும் தாண்டி, கலை நிகழ்ச்சிகள் குறிப்பாக தமிழ்நாட்டு மண்ணின் கதை உள்ளிட்டவை வெளிநாட்டுப் பாா்வையாளா்களையும் வெகுவாகக் கவா்ந்தது. இதனை ஏற்பாடு செய்த திரைப்பட இயக்குநா் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட குழுவினருக்கு பாா்வையாளா்கள் பலரும் பாராட்டுத் தெரிவித்தனா்.

ஆட்ட காய்களைத் தோ்வு செய்தாா் பிரதமா்

மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்கவுள்ள அணிகளுக்கான காய்களின் வண்ணத்தை பிரதமா் நரேந்திர மோடி தோ்வு செய்தாா்.

வெள்ளிக்கிழமை, இந்திய பெண்கள் அணியினரும், அமெரிக்க நாட்டு அணியினரும் தனித்தனியாக விளையாட உள்ளனா். அவா்களுக்கான காய்களின்

நிறத்தை சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவின் போது பிரதமா் நரேந்திர மோடி தோ்வு செய்தாா். அதில், இரண்டு நாட்டு அணியினருக்கும் கருப்பு வண்ணத்தையே அடுத்தடுத்து தோ்வு செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →