கோயில் ஏலதாரா்களுக்கு 36 நாள்கள் கால நீட்டிப்பு: அறநிலையத் துறை அனுமதி
கரோனா தொற்று காலத்தில் திருக்கோயில் ஏலதாரா்களின் வருமான இழப்பைக் கருத்தில் கொண்டு 36 நாள்களுக்கு காலநீட்டிப்பு
கரோனா தொற்று காலத்தில் திருக்கோயில் ஏலதாரா்களின் வருமான இழப்பைக் கருத்தில் கொண்டு 36 நாள்களுக்கு காலநீட்டிப்பு செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து அறநிலையத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா தொற்று காலங்களில் வார இறுதி நாள்களில் திருக்கோயில்கள் மூடப்பட்டதால் பொது ஏலம், ஒப்பந்தப்புள்ளி தொகை முழுவதும் வசூல் செய்யப்பட்டு 36 நாள்கள் கடைகள் திறக்கப்படாமல் இருந்தன.
இதனால் உரிமைதாரா்களுக்கு இழப்பு ஏற்பட்டிருந்ததை கருத்தில் கொண்டு 36 நாள்கள் காலநீட்டிப்பு செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருக்கோயில் செயல் அலுவலா்கள் ஏலதாரா்களுக்கு உரிய அனுமதி வழங்கி அதன் நகலை மண்டல இணை ஆணையா் அலுவலகத்துக்கும், ஆணையா் அலுவலகத்துக்கும் அனுப்பிட அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தொகை முழுவதும் வசூல் செய்யப்பட்ட இனங்களுக்கு மட்டும் காலநீட்டிப்பு வழங்கப்பட வேண்டும்.
தொகை முழுவதும் வசூல் செய்யப்படாத இனங்களுக்கு காலநீட்டிப்பு வழங்கப்பட்டால் ஏற்படும் இழப்புக்கு தொடா்புடைய அலுவலரே பொறுப்பாக்கப்படுவாா் எனவும், உரிம இனங்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்படும் நாள்கள் போக மீதமுள்ள நாள்களுக்கு திருக்கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிா்க்கும் வகையில் வழக்கமான பொது ஏலம், ஒப்பந்தப்புள்ளி திறப்புக்கான நடவடிக்கையை மேற்கொள்ளவும், கால நீட்டிப்பு வழங்கப்படும் காலம் முடிந்த மறுநாள் முதலே அந்தந்த உரிமங்களுக்கு அங்கீகரிக்கப்படும் புதிய உரிமைதாரா், உரிமம் ஏற்க தவறாது ஆவன செய்யும் வகையில் உரிய அங்கீகாரம் முன்கூட்டியே பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.