தமிழ்நாடு

நகரத் தூய்மைக்கான மக்கள் இயக்கம்: முதல்வர் தொடக்கிவைத்தார்

DIN

தமிழக நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். 

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு சார்பில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

அந்தவகையில் தமிழகத்தில் மக்கள் பங்களிப்புடன் கூடிய நகரத் தூய்மைக்கான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். 

சென்னை ராயபுரம் தங்கச் சாலையின் கீழ்புறம் உள்ள மேம்பாலத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர், நகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து மாணவர்கள், மக்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். மேலும் அங்கு மக்களிடையே துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

நகராட்சி நிர்வாகத் துறையின் கீழ் உள்ள இந்த திட்டம் மற்ற நகரங்களிலும் தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக நகரம்தோறும் ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4 ஆம் சனிக்கிழமைகளில் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறவிருக்கின்றன. 

மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பசுமை இயக்கங்கள், சமூகஎ அமைப்புகள், பொது மக்கள், மாணவர்கள் என அனைவரது பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு 'கலைஞர் எழுதுகோல் விருது' முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்பட்டது. 

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (3.6.2022)  சென்னை, இராயபுரம், தங்கசாலையில்  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” – தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்களை தொடங்கி வைத்தார்.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்

முதல்வரின் ஆலோசனையின்படி, 2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில், சுத்தமான, பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் (Cleanliness drive) நடத்த “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் (People’s Movement for Clean Cities)” தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தத் தீவிர தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்,  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள், தேசிய சமுதாய நலப்பணி மற்றும் தேசிய பசுமை படையை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன்  செயல்படுத்தப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் ஆகிய பகுதிகளில் இரண்டாவது சனிக்கிழமைகளில் மிகப்பெரிய அளவில் இத்தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பிரபலங்களைக் கொண்டு, மக்களுக்கு தூய்மையின் அவசியத்தை பற்றி வலியுறுத்தும் விதமாக பூங்காங்களில் கூட்டங்கள் நடத்திடவும், அவர்களை கொண்டு தூய்மை மற்றும் சுத்தம் தொடர்பான துண்டு பிரச்சாரங்கள் விநியோகிக்கவும், மஞ்சப்பையின் அவசியத்தை உணர்த்த மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வணிகவரித் துறை வாயிலாக அனைத்து கடை உரிமையாளர்கள், வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இத்தூய்மைப் பணியில் முழுமையாக பங்கெடுக்க வலியுறுத்தவும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் வாயிலாக ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகளை விளக்கி, மீண்டும் மஞ்சப்பை உபயோகப்படுத்தும் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வாயிலாக அதன் கட்டுப்பாட்டில் உள்ள உழவர் சந்தைகளில் தினந்தோறும் சேகரமாகும் காய்கறி கழிவுகளை, உழவர்சந்தைகளிலேயே மக்கச்செய்து குப்பையாக மாற்றும் பணிகளை துவங்கிடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ராயபுரம் மண்டலம், தங்கசாலை மேம்பாலப் பூங்கா அருகில் முதல்வர் இன்று “நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” – தீவிரத் தூய்மைப் பணியினை தொடங்கி வைத்தார்.  அதனைத் தொடர்ந்து, மாணவ, மாணவியர்கள் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் நகரங்களின் தூய்மை குறித்த உறுதிமொழியை ஏற்றனர்.

தொடர்ந்து பசுமையான சுற்றுச் சூழலை ஏற்படுத்தும் வகையில் தங்கசாலை மேம்பாலத்திற்கு கீழ் உள்ள இடத்தில் நகர்ப்புற அடர்வனம் அமைப்பதை தொடங்கும் விதமாக  மரக்கன்றுகளை நட்டார். பின்னர், விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, தீவிர தூய்மைப் பணி மற்றும் இல்லங்களில் குப்பைகளை மக்கும்,  மக்காத குப்பைகளாக பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, மாணவ மாணவியர்களுடன் பெருநகர சென்னை மாநகராட்சி, இராயபுரம் மண்டலம், பாஷ்யகாரலு தெருவில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு நடந்து சென்று  விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு முதல்வர் வழங்கினார்.

“நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” – தீவிர தூய்மைப் பணியை தொடங்கி வைத்த அதேநேரத்தில், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய பகுதிகளான பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், பேருந்து நிறுத்தங்கள், மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் உள்ள அமைவிடங்களில் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன்  இணைந்து தீவிரத் தூய்மைப் பணியினை மேற்கொள்கிறார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT