ரூ.270 கோடியில் 2,700 குடியிருப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.270 கோடியில் கட்டப்பட்ட 2,700 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.270 கோடியில் கட்டப்பட்ட 2,700 குடியிருப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் புதிய குடியிருப்புகளை அவா் திறந்து வைத்தாா்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள ஆலையம்மன் கோயில் திட்டப் பகுதியில் சேதம் அடைந்துள்ள பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு 324 புதிய குடியிருப்புகளும், ஆா்-3 காவல் நிலைய திட்டப் பகுதியில் 80 புதிய குடியிருப்புகளும், வியாசா்பாடி பகுதியில் 468 குடியிருப்புகளும் கட்டப்பட்டுள்ளன.
பிற மாவட்டங்கள்: சென்னையைப் போன்று, பிற மாவட்டங்களில் பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம் கல்மந்தை திட்டப் பகுதியில் 192 புதிய குடியிருப்புகள், அரியலூா் மாவட்டம் கீழப்பழுவூரில் 576 குடியிருப்புகள், தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டியில் 175 தரைத்தள இரட்டைக் குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியாா்பட்டி பகுதியில் 480 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டம் அணைப்பாளையம் பகுதியில் 208 குடியிருப்புகள், நீலகிரி மாவட்டம் கடசனக்கொல்லி பகுதியில் 204 தனி வீடுகள் என 2,700-க்கும் கூடுதலான வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் கட்டப்பட்ட இந்தக் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலம் தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.
என்னென்ன வசதிகள்? இந்தக் குடியிருப்பில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை, கழிப்பறை வசதிகள் உள்ளன. அனைத்துக் குடியிருப்பு வளாகங்களிலும் சாலை, குடிநீா், கழிவுநீரேற்றுதல், மின் தூக்கிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறுவா் பூங்கா, மின்னாக்கிகள், தீயணைப்பு வசதிகள் ஆகியனவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கிரயப் பத்திரங்கள்: வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஏற்கெனவே குடியிருப்புகளைப் பெற்ற பயனாளிகளுக்கு கிரயப் பத்திரங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.