போக்குவரத்து காவல் பிரிவுக்குபுதிய ரோந்து வாகனங்கள்
போக்குவரத்து காவல் பிரிவுக்கு வாங்கப்பட்ட புதிய ரோந்து வாகனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து பயன்பாட்டுக்காக தொடக்கிவைத்தாா்.
போக்குவரத்து காவல் பிரிவுக்கு வாங்கப்பட்ட புதிய ரோந்து வாகனங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து பயன்பாட்டுக்காக தொடக்கிவைத்தாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் பழைய ரோந்து வாகனங்களுக்குப் பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். அதன்படி, இப்போது பயன்பாட்டில் இருந்து வரும் பழுதடைந்த வாகனங்களுக்குப் பதிலாக புதிய 46 ரோந்து வாகனங்களும், 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் பழைய வாகனங்களுக்குப் பதிலாக புதிய 47 ரோந்து வாகனங்களும் என மொத்தம் 93 வாகனங்கள் வாங்கப்பட்டன.
இந்த வாகனங்கள் அனைத்தையும் பயன்பாட்டுக்காக சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடக்கிவைத்தாா். இந்த வாகனங்களில் ரோந்து வாகன சமிக்ஞை விளக்குகள், ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையில் பெறப்படும் சேவை அழைப்புகளுக்கும், போக்குவரத்து காவல் மூலம் பெறப்படும் அழைப்புகளுக்கும் விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும்.
இதற்கான நிகழ்ச்சியில், உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா், காவல் துறை தலைமை இயக்குநா் செ.சைலேந்திர பாபு, பெருநகர காவல் ஆணையாளா் சங்கா் ஜிவால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.