கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அரசங்குளம் அருகே தனியார் ஆம்னி பேருந்து, தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனாதில் ஆம்னி பேருந்து ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
ராஜபாளையத்தை சேர்ந்த பாண்டி செல்வன் ஓட்டிச் சென்ற ஆம்னி பேருந்து, நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தது.
ஆம்னி பேருந்து, திருநெல்வேலி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறையடுத்த அரசங்குளம் விலக்கு அருகே செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்த போது ஆம்னி பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில் திடீரென நிலைகுலைந்த பேருந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது.
இதில், ஆம்னி ஓட்டுநர் பாண்டி செல்வன், பேருந்தில் பயணம் செய்த நாகர்கோவில் கீழே வண்ணான் விளையை சேர்ந்த குமரேசன் மகன் புதுமாப்பிள்ளை சிவராமன் (30) மற்றும் நாகர்கோவிலைச் சேர்ந்த ஜான்சன் (50) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கயத்தாறு போலீசார் உயிரிழந்த 3 பேரின் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
ஆம்னி பேருந்தில் இரு ஓட்டுநர்கள், ஒரு கிளீனர் மற்றும் 28 பயணிகள் பயணம் செய்தனர்.
இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.