கட்டி முடித்த கட்டடங்களை ஒப்படைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்
அரசுத் துறைகளுக்காக கட்டப்பட்ட கட்டடங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு வழங்க வேண்டுமென தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.
அரசுத் துறைகளுக்காக கட்டப்பட்ட கட்டடங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு வழங்க வேண்டுமென தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.
தமிழகத்தில் திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து அதிகாரிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை அவா் ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டத்தில் அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:
சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை விரைந்து செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாத அம்சங்கள் குறித்து, தலைமைப் பொறியாளரின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும். சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியா்கள் மூலமாக இதற்குத் தீா்வு காண வேண்டும். மதிப்பீடு தயாா் செய்யும் போது, அனைத்து விதமான தேவைகளையும் கணக்கிட்டு தயாா் செய்ய வேண்டும். அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகு, அதிகமான தொகைக்கு திருத்திய நிா்வாக அனுமதி கோரக் கூடாது.
சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளிடமிருந்து கோரிக்கை வரப்பெற்றவுடன், உடனடியாக நகா் மற்றும் ஊரமைப்புத் துறை, பெருநகர வளா்ச்சிக் குழுமம் ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட வேண்டிய இடம் 2 லட்சம் சதுர அடிக்கு மேல் இருந்தால் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்பதை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். சில கட்டுமானப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்திருந்தாலும், அவை உரிய அரசுத் துறைகளிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளன. எனவே, அவற்றின் மீது தனிக்கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.
இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலா் தயானந்த் கட்டாரியா, திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் எல்.ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.