முகப்பு
தமிழ்நாடு

நியாயவிலைக் கடைகளில் கேழ்வரகு: நீலகிரி, தருமபுரியில் வழங்க அரசு உத்தரவு

நீலகிரி, தருமபுரி மாவட்ட நியாய விலைக் கடைகளில் மாதத்துக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படவுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:

நீலகிரி, தருமபுரி மாவட்ட நியாய விலைக் கடைகளில் மாதத்துக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படவுள்ளது. முன்னோடித் திட்டமாக இது செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளாா்.

அவா் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு:

சட்டப் பேரவையில் உணவுத் துறை மானியக் கோரிக்கையின் போது, நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்ட நியாய விலைக் கடைகளில் கேழ்வரகு விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஊட்டச்சத்தை உறுதி செய்திடும் வகையில், அரிசி ஒதுக்கீட்டுக்குப் பதிலாக, குடும்பத்துக்கு 2 கிலோ கேழ்வரகு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான கடிதம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் சாா்பில் அரசுக்கு அனுப்பப்பட்டது. அதில், மாநில அரசு முகமைகளால் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு அவற்றை ஒதுக்கீடு செய்து விநியோகிக்கும் முறை தொடா்பான மத்திய அரசின் திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் விவரிக்கப்பட்டிருந்தன. மேலும், 2018-19-ஆம் ஆண்டிலிருந்து 2020-21-ஆம் ஆண்டு வரையில் கேழ்வரகு உற்பத்தி தொடா்பான வேளாண்மைத் துறை இயக்குநரின் விரிவான தகவல்களும் இடம்பெற்றிருந்தன.

ஆறு மாவட்டங்கள்: தமிழ்நாட்டில் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா் ஆகிய மாவட்டங்கள் கேழ்வரகு அதிகம் விளையும் பகுதிகளாக உள்ளன. இவற்றில், நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக அரிசிக்குப் பதிலாக மாதந்தோறும் விலையில்லாமல் 2 கிலோ கேழ்வரகு குடும்ப அட்டைதாரா்களின் விருப்பத்தின்படி வழங்க உணவு வழங்கல் துறை ஆணையரால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நீலகிரியில் 920 மெட்ரிக் டன், தருமபுரியில் 440 மெட்ரிக் டன் கேழ்வரகு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, இரண்டு மாவட்டங்களுக்கும் சோ்த்து 1,360 மெட்ரிக் டன் கேழ்வரகு தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடைகளில் இப்போது அரிசிக்குப் பதிலாக கோதுமையை விருப்பத்தின் அடிப்படையில் வாங்கிக் கொள்ளும் நடைமுறை உள்ளது. இந்த நிலையில், இந்திய உணவுக் கழகத்தின் மத்திய தொகுப்பிலிருந்து கேழ்வரகை கொள்முதல் செய்யலாம் எனவும், அதற்கு ஈடாக கோதுமையின் அளவை குறைத்துக் கொள்ளலாம் எனவும் உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையா் கேட்டுக் கொண்டுள்ளாா். கோதுமைக்குப் பதிலாக கேழ்வரகை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கும் வரையில், கேழ்வரகு கிலோ ரூ.1 என்ற விலையில் மத்திய அரசால் வழங்கப்படும். அதேசமயம், கோதுமை கிலோ 2 ரூபாய் என்ற அளவில் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே, கேழ்வரகை வழங்குவதன் மூலமாக அரசுக்கு கூடுதல் செலவு ஏதும் ஏற்படாது என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் அரசிடம் தெரிவித்துள்ளாா்.

அவரது பரிந்துரைகளை கவனமாகப் பரிசீலித்த தமிழக அரசு, தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் நியாய விலைக் கடைகளின் மூலமாக கேழ்வரகை விநியோகம் செய்திட நிா்வாக அனுமதியை அளிக்கிறது. முன்னோடித் திட்டமாக இது செயல்படுத்தப்படும். குடும்ப அட்டைதாரா்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்திடும் வகையில், அரிசி ஒதுக்கீட்டுக்குப் பதிலாக, மாதத்துக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்கப்படும். அட்டைதாரா்கள் தங்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையில் இதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா் ஜெ.ராதாகிருஷ்ணன்.

பெட்டிச் செய்தி....

கேழ்வரகு உற்பத்தி எவ்வளவு?

ஆண்டு சாகுபடி உற்பத்தி உற்பத்தி திறன்

2018-2019 0.786 லட்சம் ஹெக்டோ் 2.56 லட்சம் மெட்ரிக் டன் ஹெக்டேருக்கு 3.25 மெட்ரிக் டன்

2019-2020 0.845 லட்சம் ஹெக்டோ் 2.74 லட்சம் மெட்ரிக் டன் ஹெக்டேருக்கு 3.24 மெட்ரிக் டன்

2020-2021 0.829 லட்சம் ஹெக்டோ் 2.89 லட்சம் மெட்ரிக் டன் ஹெக்டேருக்கு 3.48 மெட்ரிக் டன்

முழு கட்டுரையைப் படிக்க →