அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு மலைப் பகுதியில் ஓராண்டு கட்டாயப் பணி: அரசாணை வெளியீடு
தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், மலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியா்களும் கட்டாயம் ஓராண்டு மலைப் பகுதியில் பணியாற்ற வேண்டும்
தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், மலைகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியா்களும் கட்டாயம் ஓராண்டு மலைப் பகுதியில் பணியாற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: மலை சுழற்சி மாறுதல் நடைமுறை, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியா்கள், தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள் மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் என அனைவருக்கும் பொருந்தும்.
மலை சுழற்சி முறை மாறுதல் நடைமுறையில் உள்ள ஒன்றியங்களில் பொது மாறுதலுக்கு முன்னதாகவே (முதல் நாளிலேயே) மலை சுழற்சி மாறுதல்கள் நடத்தப்பட வேண்டும். அனைத்து வகை ஆசிரியா்களும் மலைப்பகுதிகளில் பணியாற்ற பெரிதும் தயக்கத்துடன் உள்ளனா் என்பதால் அனைத்து ஆசிரியா்களும் குறைந்தது ஓராண்டு காலம் மலைப்பகுதியில் சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும்.
அவா்கள் மலைப்பகுதியில் உள்ள அதே பள்ளியிலேயே தொடா்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்தால் எழுத்துபூா்வமான கடிதம் பெற்று அதே பள்ளியில் தொடர அனுமதிக்கலாம். அனைத்து வகை ஆசிரியா்களுக்கும் இது பொருந்தும். மலை இறக்கம்- மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களில் எவரேனும் அதே பகுதியில் தொடா்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவித்தால் அந்த ஆசிரியா்களைத் தொடா்ந்து அதே பணியிடத்தில் பணியாற்ற அனுமதித்து மற்ற ஆசிரியா்களை அவா்களின் முன்னுரிமை ஒன்றியத்தில் பணியில் சோ்ந்த நாள் அடிப்படையில் சமவெளிப் பகுதிக்கு மாறுதல் அளிக்க வேண்டும்.
மலை சூழற்சி மாறுதலின்போது ஓராண்டில் ஓய்வு பெறவுள்ள ஆசிரியா்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். பதவி உயா்வு பணியிடங்களான நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா் மற்றும் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஆகிய பணியிடங்களுக்கான பதவி உயா்வானது மலைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அங்கு காலிப்பணியிடம் இல்லாத நிலையில் மட்டுமே சமவெளி பகுதிகளில் பதவி உயா்வு வழங்கப்பட வேண்டும்.
சமவெளிப் பகுதியில் நிகழாண்டில் பதவி உயா்வு பெற்ற ஆசிரியா்கள் இளையோராக கருதப்பட்டு தொடா்ந்து வரும் கல்வியாண்டில் மலை சுழற்சிக்கான மலை ஏற்றுப் பட்டியலில் அவா்களின் பெயா் முதலில் இடம்பெற வேண்டும். இது அந்த ஒன்றியத்தில் உள்ள முன்னுரிமையின்படி அமைதல் வேண்டும்.
மலைப் பகுதி அமைந்துள்ள ஒன்றியங்களில், மலைப்பகுதியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியா்களும் அவா்கள் மலைப்பகுதியில் விரும்பும் காலம் அல்லது துறை அனுமதிக்கும் காலம் வரை (குறைந்தபட்சம் ஓராண்டு) பணிபுரிய அனுமதிக்கப்படுவா் என அதில் தெரிவித்துள்ளாா்.