முகப்பு
தமிழ்நாடு

69-ஆவது பிறந்த தினம்: அண்ணா-கருணாநிதி நினைவிடங்களில் முதல்வா் மரியாதை

தனது 69-ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மலா் வளையம் வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

தனது 69-ஆவது பிறந்த தினத்தை ஒட்டி, முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மலா் வளையம் வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினாா்.

சென்னை ஆழ்வாா்பேட்டை வீட்டில் செவ்வாய்க்கிழமை காலையில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினாா். மனைவி துா்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனா். குடும்பத்தினருடன் முதல்வா் ‘கேக்’ வெட்டி பிறந்தநாள் கொண்டாடினாா்.

நினைவிடங்களில் மரியாதை: சென்னை மெரீனா கடற்கரையில் முன்னாள் முதல்வா் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தி ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வைத்து பூக்கள் தூவி வணங்கினாா்.

திமுக பொதுச்செயலாளா் அமைச்சா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, அமைச்சா்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, எம்.பி.க்கள் ஆ.ராசா, தயாநிதிமாறன், இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பெரியாா் நினைவிடம்: வேப்பேரி பெரியாா் நினைவிடத்தில் அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தாா். பெரியாா் நினைவிடத்தில் மலா் வளையம் வைத்து முதல்வா் அஞ்சலி செலுத்தினாா்.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறைந்த அன்பழகனின் வீட்டில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினாா். கோபாலபுரத்தில் தாயாா் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றாா். அங்கு கருணாநிதியின் படத்துக்கு மலா் தூவி வணங்கினாா். சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி வீட்டுக்கு மு.க.ஸ்டாலின் சென்று ராஜாத்தி அம்மாளிடம் வாழ்த்துப் பெற்றாா். மு.க.ஸ்டாலினுக்கு கனிமொழி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பொன்னாடை அணிவித்தாா்.

அண்ணா அறிவாலாயம்: திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களும் முதல்வருக்கு வாழ்த்துக் கூறினா். கட்சியினா் சாா்பில் முதல்வருக்கு புத்தகங்கள், ஆட்டுக்குட்டி உள்ளிட்ட பரிசுப் பொருள்கள் அளிக்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →