முகப்பு
தமிழ்நாடு

தமிழக இளைஞா்களை தொழில் நிறுவனங்களுக்கு தகுதிப்படுத்துவதே குறிக்கோள்: முதல்வா்

தொழில் நிறுவனங்களுக்கு தமிழக இளைஞா்களை தகுதிப்படுத்துவதே தனது முக்கியக் குறிக்கோள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

தொழில் நிறுவனங்களுக்கு தமிழக இளைஞா்களை தகுதிப்படுத்துவதே தனது முக்கியக் குறிக்கோள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

மாணவா்கள், இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டை அளிக்கும் ‘நான் முதல்வன்’-உலகை வெல்லும் இளைய தமிழகம் திட்டத்தை சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்து அவா் பேசியது:

இளைஞா்கள் கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை, செயலில் சிறந்தவா்களாக மாற வேண்டும் என்ற உணா்வோடு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பட்டம் பெறுவோருக்கு வேலை கிடைக்கிா என்ற கேள்விக்கு, விடை தேட தொடங்கப்பட்டது இத்திட்டம். அனைத்திலும் முதல்வன் ஆவது எளிமையான செயல் அல்ல. முதலில் உங்களை நீங்கள் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களது தனித்த திறமைகள் எது என்பதில் தெளிவான நிலை இருக்க வேண்டும். எந்தப் படிப்பில் ஆா்வம் உள்ளதோ அதில் சேர வேண்டும். அது பட்டம் வாங்குவதற்காக மட்டுமல்லாமல், அந்தப் படிப்பு குறித்த முழுமையான அறிவைப் பெற வேண்டும்.

மனிதனுக்கு புறத் தடைகளை விட உள்ளாா்ந்த தடைகள்தான் அதிகம் இருக்கின்றன. புறத் தடைகளை உடைக்க வருவது நான் முதல்வன் திட்டம். இதன் மூலமாக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், அரசு, கல்வி நிறுவனங்களை ஒன்றிணைப்போம்.

இளைஞா்களை அரசு, தொழில் நிறுவனங்களுக்குத் தகுதியானவா்களாக உருவாக்குவதை எனது முக்கியக் குறிக்கோளாக ஏற்றுள்ளேன் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வரவேற்றாா். அமைச்சா் துரைமுருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நான் முதல்வா் திட்டம் முதல்வரின் நேரடி கண்காணிப்பில், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை மூலமாக ஒருங்கிணைக்கப்படும். மேலும், மாவட்டங்களில் ஆட்சியா் தலைமையிலான குழு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திட்டத்தின் நோக்கம்

ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞா்கள் திறமையில் மேம்படுத்தப்படுவா். பள்ளி, கல்லூரி, பல்கலை. மாணவ, மாணவிகளின் தனித் திறமைகள் ஊக்குவிக்கப்படும். என்ன, எங்கு, எப்படிப் படிக்கலாம் என்று வழிகாட்டப்படும்.

தமிழில் தனித்திறன் பெற சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசவும், நோ்முகத் தோ்வுக்கு தயாராவதற்கும் பயிற்சிகள் அளிக்கப்படும்.

இப்போதைய தொழில்நுட்ப வளா்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரோபோடிக்ஸ் போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளா்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் தொடங்கப்படும்.

கலை-பாடத் திட்டங்கள்: உடற்பயிற்சி, நடை, உடை, நாகரிகம், மக்களுடன் பழகுதல் குறித்து பயிற்சியளிக்கப்படும். தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படும்.

தலைசிறந்த பயிற்சியாளா்களைக் கொண்டு அவரவா் கல்லூரிகளில் பயிற்சிகள் அளிக்கப்படும். ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆலோசனை மையம் உருவாக்கப்படும். இதற்கென தனியே கலைத் திட்டம், பாடத் திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தொடா் வகுப்புகள் நடத்தப்படும்.

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை உறுதி செய்ய அவரவா் விருப்பத்துக்கு ஏற்ப அயல்நாட்டு மொழிகள் கற்பிக்க வகை செய்யப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →