தமிழ்நாடு

அன்னவாசல் பேரூராட்சி தலைவர் தேர்தலில் மோதல்: கல்வீச்சு, தடியடியில் 8 பேர் காயம்

DIN

விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சியின் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலின்போது திமுகவினருக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு தகராறாக மாறி திமுகவினர் பேரூராட்சி அலுவலகம் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் காவலர்கள் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.

இதனால் அன்னவாசல் பேரூராட்சி அலுவலகமே போர்க்களம் போல் காட்சி அளித்த நிலையில் இந்த தடியடி மற்றும் மோதல் சம்பவத்தில் திமுகவினர் 4 பேர், காவலர்கள் 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே அங்கு நடத்தப்பட்ட மறைமுக தேர்தலில் அதிமுக வேட்பாளர் சாலை பொன்னம்மா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகளில் அன்னவாசல் ஒரு பேரூராட்சியை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் திமுக முழுமையாக வெற்றி பெற்று தலைவர் பதவியை கைப்பற்றியது.

இந்நிலையில் அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் அதிமுகவும்  ஒரு இடத்தில் சுயேட்சையும், 5 இடங்களில் திமுகவும் ஒரு இடத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களும் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில் ஒரு சுயேட்ச்சை உறுப்பினரின் ஆதரவுடன் 9 உறுப்பினர்களைக்  கொண்ட அதிமுக பெரும்பான்மையுடன் தலைவர் பதவியைக் கைப்பற்ற இன்று மறைமுக தேர்தலை சந்தித்தது.

இதனிடையே மறைமுக தேர்தலின் போது திமுக உள்ளிட்ட பிற கட்சிகளால் தங்களின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் தங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அதிமுகவை சேர்ந்த உறுப்பினர்கள் நேற்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் அன்னவாசல் பேரூராட்சியில் நடைபெறும் தலைவர் பதவிக்கு வாக்களிக்க வரும் அதிமுக உறுப்பினர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபனுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

அதனடிப்படையில் ஒரு சுயேச்சை உட்பட அதிமுக ஆதரவு உறுப்பினர்கள் 9 பேரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்த காவலர்கள் இன்று காலை ஏழு முப்பது மணிக்கே பேரூராட்சி அலுவலகத்திற்குள் அனுப்பி வைத்தனர்.

இதையறிந்த திமுகவினர் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக எப்படி அலுவலகத்திற்குள் உறுப்பினர்களை அனுமதிக்கலாம் என்று கூறி காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பிரச்னை அப்போதிலிருந்தே தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் 9 அதிமுக உறுப்பினர்களையும் வெளியே அனுப்பி வைத்தார்.

இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டதையடுத்து பேரூராட்சி வளாகத்தின் வெளியே காவலர்கள், 9 அதிமுக உறுப்பினர்களுக்கும் 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கி நிறுத்தி வைத்தனர்.

அப்போது திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் அங்கு வந்த திமுகவினர் அதிகாரிகளும் காவலர்களும் அத்துமீறி அதிகாலையிலே அதிமுக உறுப்பினர்களை பேரூராட்சி அலுவலகத்திற்குள் எவ்வாறு அனுப்பி வைக்கலாம் என்று கேட்டதோடு  தங்களையும் உள்ளே அனுப்ப வேண்டும் என்று  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே அதிமுக நிர்வாகிகளும் எதிர் திசையிலிருந்து பேரூராட்சி அலுவலகத்தை நோக்கி காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபடி அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காவலர்கள் அதிமுக நிர்வாகிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். எனினும் திமுகவினர் தொடர்ந்து காவலர்களின் மூன்றடுக்கு பாதுகாப்பையும் மீறி பேரூராட்சி அலுவலகத்தில் நுழைவதற்காக முயன்றதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதனிடையே 9.30 மணி அளவில்  அதிமுக உறுப்பினர்கள் 9 பேரையும் மறைமுக தேர்தலில் வாக்களிப்பதற்காக பேரூராட்சி அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர். அதன் பின் உள்ளே மறைமுக தேர்தல் நடந்து கொண்டிருப்பதை அறிந்து ஆத்திரமடைந்த திமுகவினர் காவலர்கள் அமைத்திருந்த மூன்றடுக்கு பாதுகாப்புகளை உடைத்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றபோது திமுகவினருக்கும்  காவலர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது திமுகவினர் சிலர் பேரூராட்சி அலுவலகம் மற்றும் காவலர்கள் மீது கல்வீச தொடங்கியதால்  நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவலர்கள், புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபன்  உத்தரவின் பேரில்  தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க தொடங்கினர்.  மீண்டும் கல் வீச தொடங்கியதால் காவலர்கள் அவர்களை விரட்டி விரட்டி அடித்தனர்.

இதனால் அங்கே கூடியிருந்த திமுகவினர் நாலாபுறமும் சிதறி ஓடியதால் அந்த பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

இந்த தடியடி மற்றும் கல்வீச்சு சம்பவத்தில் திமுக  தரப்பில் நான்கு பேர், காவலர்கள் 4 பேர் என மொத்தம் 8 பேர் காயமடைந்தனர்.

தடியடி நடத்தி நிலைமையை ஓரளவு  கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தல் முடிவடைந்து அதிமுக உறுப்பினர் சாலை பொன்னம்மா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மாதேஸ்வரன் அறிவித்தார்.

இதனால் மீண்டும் ஆத்திரமடைந்த திமுகவினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் காவலர்களும் ஒருதலைப்பட்சமாகவும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக அவர்கள் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி மீண்டும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு வந்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி போராட்டத்தில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகளிடம் நடந்த விவரங்களைக் கேட்டறிந்தார். திமுகவினர் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீதும் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு அதிகாரிகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களிடம் வாக்குறுதி அளித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

தொடர்ந்து தற்போது அன்னவாசல் பேரூராட்சி அலுவலகம் முன்பு பதற்றமான சூழல் நிலவுவதால் 200க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் 2 வஜ்ரா வாகனங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளது.மேலும் திருச்சி டிஐஜி சரவண சுந்தரும் அன்னவாசல் பகுதியில் முகாமிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு பணிகளை கேட்டறிந்து வருகிறார்.

இன்னும் சிறிது நேரத்தில் பேரூராட்சி துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளதால் உள்ளே சென்ற ஒரு சுயேச்சை வேட்பாளர் உட்பட அதிமுக உறுப்பினர்களும் பாதுகாப்பாக பேரூராட்சி அலுவலக அறையில் அமரவைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் திமுகவினர் தொடர்ந்து அன்னவாசல் பேரூராட்சி அலுவலகம் முன்பு  வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் திரண்டு வருவதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT