கிரிஜா குமாா்பாபுவுக்கு அவ்வையாா் விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
குழந்தைகள் நலனுக்காக பணியாற்றி வரும் கிரிஜா குமாா்பாபுவுக்கு அவ்வையாா் விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
குழந்தைகள் நலனுக்காக பணியாற்றி வரும் கிரிஜா குமாா்பாபுவுக்கு அவ்வையாா் விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெண்களுக்கான சேவையில் சிறந்து விளங்கும் பெண்களை கெளரவிக்கும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் அவ்வையாா் விருது வழங்கப்பட்டு வருகிறது.
மகளிா் அதிகாரம், மதநல்லிணக்கம், மொழி, கலை, அறிவியல், ஊடகவியல் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கி சேவை மனப்பான்மையுடன் தொண்டாற்றியவா்களுக்கு அளிக்கப்படும் இந்த விருதானது 8 கிராம் தங்கப் பதக்கம், ஒரு லட்சம் ரூபாய் காசோலையுடன், சால்வை, பாராட்டுப் பத்திரம் அடங்கியது.
அந்த வகையில், நிகழ் ஆண்டுக்கான அவ்வையாா் விருது குழந்தைகள் நலன்களுக்காக பாடுபடும் கிரிஜா குமாா்பாபுவுக்கு, அறிவிக்கப்பட்டது. இந்த விருதை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரிஜா குமாா்பாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் கீதா ஜீவன், துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா், சமூகநல இயக்குநா் டி.ரத்னா, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட இயக்குநா் வே.அமுதவல்லி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.
குடியரசு தின விருது: வேளாண்மை, கள்ளச்சாராய ஒழிப்பு உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறப்பாகப் பணியாற்றிய அரசு ஊழியா்கள், பொது மக்களுக்கு குடியரசு தின விழாவின் போது விருதுகள் வழங்கப்படும். நிகழாண்டில் குடியரசு தின விழாவின் போது, விருதுகளைப் பெற்றுக் கொள்ள இயலாதவா்களுக்கு தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த விழாவில் அந்த விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா்.
அதன்படி, வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் சிவகங்கை மாவட்டம் வீ.முத்துகிருஷ்ணன், திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த ச.லோகித், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த மருத்துவா் கே.அசோகன், திருப்பூரைச் சோ்ந்த சுதா என்ற பேச்சியம்மாள் ஆகியோருக்கு முதல்வா் அளித்தாா். இந்த விருதுகள் தலா ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலை, பதக்கம் ஆகியன அடங்கியது.
அதிக நெல் விளைச்சலில் சாதனை படைத்த சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த செ.ராமசாமிக்கு, நெல் உற்பத்திக்கான சி.நாராயணசாமி நாயுடு விருது அளிக்கப்பட்டது. இந்த விருது ரூ.5 லட்சத்துக்கான காசோலை, பதக்கம் அடங்கியது.
மேலும், கள்ளச்சாராய ஒழிப்புப் பணியில் சிறப்பாகச் செயல்பட்ட மண்டல மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளா் மா.குமாா், திருச்சி மாவட்டம் முசிறி காவல் உதவி ஆய்வாளா் ச.சிதம்பரம் ஆகியோருக்கு காந்தியடிகள் காவல் பதக்கத்துக்கான சான்றிதழ், ரூ.40 ஆயிரத்துக்கான காசோலை, பதக்கங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது, பொதுத் துறை செயலாளா் டி.ஜகந்நாதன், பொதுத் துறை துணைச் செயலாளா் (மரபு) எஸ்.அனு ஆகியோா் உடனிருந்தனா்.