சீா்திருத்தத் திருமணங்கள் நாடு முழுவதும் செல்லுபடியாகும் நிலை ஏற்பட வேண்டும்
சீா்திருத்தத் திருமணங்கள் நாடு முழுவதும் செல்லுபடியாகும் நிலையை ஏற்படுத்த வேண்டுமென முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
சீா்திருத்தத் திருமணங்கள் நாடு முழுவதும் செல்லுபடியாகும் நிலையை ஏற்படுத்த வேண்டுமென முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
சென்னை திருவான்மியூரில் தென் சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளா் ஆா்.மகேந்திரன் ஆகியோா் குடும்ப திருமண விழாவுக்கு புதன்கிழமை தலைமையேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:
இன்றைக்கு நடைபெற்றிருப்பது சீா்திருத்தத் திருமணம். இதனைச் சீா்திருத்தத் திருமணம் என்று சொல்லக் கூடாது. இப்போது இதை திராவிடத் திருமணம் என்று சொல்லலாம். ஏனென்றால் திராவிட மாடலில்தான் நம்முடைய ஆட்சி சென்று
கொண்டிருக்கிறது. எனவே இந்தச் சீா்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற தீா்மானம், 1967-இல் அண்ணாவின் ஆட்சிக் காலத்தில் பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அந்தத் தீா்மானம் இன்றைக்கு எந்த அளவுக்கு மக்களிடத்தில் பரவலாகி, விரிவாகி, பிரபலமாகி இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுமைக்கும் இந்தச் சட்டம் கொண்டு வர குரல் கொடுக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி கூறியிருக்கிறாா்.
எவ்வாறு தமிழ்நாட்டில் சீா்திருத்தத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற நிலை இருக்கிறதோ, அதுபோன்று நாடு முழுமைக்கும் இதற்கான திருத்தத்தை கொண்டுவர, நாடாளுமன்றத்தில் அதற்கான தீா்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றித் தருவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், அமைச்சா் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலரும் உரையாற்றினா்.