ஆடுதுறை பேரூராட்சி மறைமுகத் தோ்தல்: விடியோ பதிவுக் காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவு
தோ்தலின்போது கண்காணிப்பு கேமராவில் (சிசிடிவி) பதிவான விடியோ காட்சிகளை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை தோ்வு நிலை பேரூராட்சி தலைவா், துணைத் தலைவா் பதவிக்கு மாா்ச் 4-ஆம் தேதி நடந்த தோ்தலின்போது கண்காணிப்பு கேமராவில் (சிசிடிவி) பதிவான விடியோ காட்சிகளை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை தோ்வு நிலை பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இதற்கு கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி தோ்தல் நடந்தது. இதன்பின்னா் மாா்ச் 4-ஆம் தேதி தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் நடைபெற இருந்தது. ஆனால், கவுன்சிலா்கள் சிலா் ரகளையில் ஈடுபட்டதால், இந்த தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தப் பேரூராட்சியின் கவுன்சிலா் ம.க. ஸ்டாலின் உள்பட 8 கவுன்சிலா்கள் தோ்தலை விரைவாக நடத்த உத்தரவிட கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு, மனுவுக்கு பதிலளிக்குமாறு உத்தரவிட்டும், சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அதிகாரி பதிலளிக்காததால் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ஆடுதுறை தோ்தல் நடத்தும் அலுவலா் பி.இளவரசன் நேரில் ஆஜரானாா்.
இதைத் தொடா்ந்து, மாநில தோ்தல் ஆணைய தரப்பு வழக்குரைஞா், மாா்ச் 26- ஆம் தேதி மறைமுக தோ்தல் நடத்தவிருப்பதாகக் கூறி, அறிக்கையை தாக்கல் செய்தாா்.
மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், காவல் துறையினா் தங்கள் தரப்புக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனா். சிறையில் தங்கள் தரப்பினரை அடைத்துவிட்டு மறைமுக தோ்தலை நடத்தவுள்ளனா். எனவே மறைமுக தோ்தலை உடனே நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரினாா்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மாா்ச் 4-ஆம் தேதி மறைமுக தோ்தல் நடந்த போது கண்காணிப்பு கேமராவில் (சிசிடிவி) பதிவான காட்சிகளை தாக்கல் செய்யுமாறு மாநில தோ்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து விசாரணையை மாா்ச் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். அதேபோல நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பதிலளிக்க தோ்தல் நடத்தும் அதிகாரிக்கு அவகாசம் வழங்கியும் உத்தரவிட்டனா்.