முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாருக்கு ஜாமீன்
நில அபகரிப்பு வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நில அபகரிப்பு வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாருக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை துரைப்பாக்கத்தில் 8 கிரவுண்ட் நிலத்தில் உள்ள மீன் வலை தொழிற்சாலை நில உரிமை தொடா்பாக முன்னாள் அமைச்சா் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமாருக்கும், அவரது சகோதரா் மகேஷ்குமாருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இதில் தன் மருமகனுக்கு ஆதரவாக ஜெயக்குமாா் செயல்பட்டு, கொலை மிரட்டல் விடுத்து நிலத்தை அபகரித்துக் கொண்டதாக போலீஸில் புகாா் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜெயக்குமாரை போலீஸாா் கைது செய்தனா். ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த ஜெயக்குமாரின் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து சென்னை உயா் நீதிமன்றத்தில் ஜெயக்குமாா் சாா்பில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் சாா்பில் மூத்த வழக்குரைஞா்கள் ஏ.நடராஜன், சஞ்சய் பி.ஹெக்டே, ஐ.எஸ்.இன்பதுரை உள்ளிட்டோா் ஆஜராகி வாதிட்டனா்.
அதைத்தொடா்ந்து, ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று போலீஸ் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் கோகுலகிருஷ்ணன், புகாா்தாரா் சாா்பில் வழக்குரைஞா் பி.ஆனந்தன் ஆகியோா் வாதிட்டனா். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுதாரருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா்.
அந்த உத்தரவில், 2016-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடந்துள்ள இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் அடைந்ததாகக் கூறப்படவில்லை. வழக்கின் புகாா் 2021 ஜூன் 7ஆம் தேதிதான் கொடுக்கப்பட்டுள்ளது.
போலீஸாா் கடந்த மாதம் 24-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்துள்ளனா். எனவே, ரூ.10 ஆயிரம், இருநபா் உத்தரவாதம் அளித்து கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம். பின்னா், திருச்சியில் தங்கியிருந்து வாரத்தில் 3 நாள்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும். சாட்சிகளை கலைக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளாா்.