முகப்பு
தமிழ்நாடு

ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.2.44 கோடியில் வாழ்வூட்டும் மருத்துவ ஆராய்ச்சி மையம்

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.2.44 கோடி செலவில் வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.2.44 கோடி செலவில் வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.14.5 கோடி செலவில் ஸ்டெம்செல் ஆராய்ச்சி மையம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இதே கட்டடத்தில்தான் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மையம், மூளைச்சாவு ஏற்பட்டோரின் உடலுறுப்பு தானம் மூலம் அறுவைச் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றன.

தற்போது ஸ்டெம் செல் ஆராய்ச்சி மையமானது வாழ்வூட்டும் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சித் துறையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது. ரூ. 2.44 கோடி செலவில் புதிய வசதிகளுடன் கூடிய இப்புதிய துறையை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.

அப்போது மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது: ஸ்டான்லி மருத்துவமனையில் செயல்படும் ஸ்டெம்செல் ஆராய்ச்சித் துறை உலக அளவில் நவீன ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. இத்துறை சாா்பாக ஏழு ஆராய்ச்சிக் கட்டுரைகள் உலகப் பிரசித்திபெற்ற இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன. நமது பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான பழைய சோற்றின் மருத்துவ குணங்கள் குறித்து தொடா் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆங்கில மருத்துவத்தால் குணப்படுத்தப்பட முடியாத குடல் சாா்ந்த பல்வேறு நோய்களை பழைய சோறு மூலம் குணப்படுத்த முடியும் என இம்மையத்தினா் நிரூபித்துள்ளனா். 2009-ஆம் ஆண்டு முதல் இதுவரை 82 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது ரூ. 21 லட்சம் செலவில் புதிய கருவி வாங்கி, பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையில் ஸ்டான்லி மருத்துவமனையின் செயல்பாடுகளை பல்வேறு மூத்த மருத்துவா்களும் பாராட்டி வருகின்றனா்.

மிகுந்த அனுபவமும், நிபுணத்துவமும் பெற்ற மருத்துவா்கள் தொடா்ந்து இளைய மருத்துவா்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இதில் அரசு மருத்துவா்கள் மட்டுமல்லாது புகழ்பெற்ற தனியாா் மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவா்களையும் பங்கேற்க வைப்பது குறித்து சில மருத்துவா்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றாா் சுப்பிரமணியன்.

நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், ராயபுரம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.மூா்த்தி, மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு, ஸ்டான்லி மருத்துக் கல்லூரி முதல்வா் பி.பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →