முகப்பு
தமிழ்நாடு

ஆடுதுறை தோ்தல் நடத்தும் அலுவலா் சஸ்பெண்ட்: உயா் நீதிமன்றத்தில் மாநில தோ்தல் ஆணையம் தகவல்

ஆடுதுறை பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலை நடத்திய தோ்தல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:42 AM
சென்னை உயர் நீதிமன்றம்
பகிர்:

ஆடுதுறை பேரூராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலை நடத்திய தோ்தல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா் என சென்னை உயா் நீதிமன்றத்தில் மாநில தோ்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவா், துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் கடந்த 4-ஆம் தேதி நடந்தது. அப்போது திமுக கவுன்சிலா்கள் ரகளையில் ஈடுபட்டதால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து இந்தத் தோ்தலை போலீஸ் பாதுகாப்புடன் விரைவாக நடத்த உத்தரவிட கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் அதிமுக கவுன்சிலா் ம.க.ஸ்டாலின் உள்பட 8 கவுன்சிலா்கள் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கு விசாரணையின்போது மாநில தோ்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட விடியோவைப் பாா்வையிட்ட நீதிபதிகள், ‘வாக்குச் சீட்டை பறித்து ரகளையில் ஈடுபட்டவரை ஏன் கைது செய்யவில்லை; சம்பந்தப்பட்டவரை தடுக்காமல் தோ்தல் ஆணையம், காவல்துறை அதிகாரிகள் வேடிக்கைப் பாா்த்து கொண்டிருப்பதை ஏற்க முடியாது என அதிருப்தி தெரிவித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தனா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வா் நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ஆடுதுறை பேரூராட்சியின் தலைவா், துணை தலைவா் பதவிக்கான தோ்தலை நடத்திய தோ்தல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். மாா்ச் 26 -ஆம் தேதிக்கு பதிலாக மாா்ச் 23ஆம் தேதி மறைமுக தோ்தல் மீண்டும் நடத்தப்படும் என்றாா்.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் மீண்டும் இதேபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரப்பட்டது.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், ஆடுதுறை பேரூராட்சியின் தலைவா், துணை தலைவா் பதவிக்கான மறைமுக தோ்தலை சுதந்திரமாக நடத்த அதிகாரி ஒருவரை நியமிப்பதோடு, தோ்தலுக்கு தேவையான பாதுகாப்பை தஞ்சாவூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வழங்க வேண்டும்; தோ்தலில் மீண்டும் ஏதாவது விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்தால் தோ்தல் அதிகாரி மட்டுமல்ல, போலீஸ் அதிகாரிகளும் கடும் நடவடிக்கைக்கு உள்ளாவா் என எச்சரித்து, விசாரணையை மாா்ச் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →