10 மாதங்களில் 491 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில், தடை செய்யப்பட்ட 491 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் கடந்த 10 மாதங்களில், தடை செய்யப்பட்ட 491 டன் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை தியாகராயா்நகரில் மாநில அளவிலான உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்கான பயிலரங்கத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்துப் பேசியதாவது: தமிழகத்தில் சென்னை, தஞ்சாவூா், மதுரை, சேலம், கோவை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய 6 இடங்களில் உள்ள உணவு ஆய்வகங்களில் உணவு மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகிறது. உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்களுக்கான பயிலரங்கம் தற்போது தொடங்கப்பட்டு 32 மாவட்ட நியமன அலுவலா்கள், 64 உணவு பாதுகாப்பு அலுவலா்கள், 3 உணவு பகுப்பாய்வாளா்கள் ஆகியோருக்கு வல்லுநா்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தத் துறையில் உரிமம் மற்றும் பதிவுச்சான்று மூலமாக பெறப்பட்ட வருவாய் ரூ.38.2 கோடி. அந்தவகையில் கடந்த ஆண்டை விட 3 மடங்கு அதிக அளவு வருவாய் பெற உழைத்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இந்த அரசு, புகையிலை மற்றும் நிக்கோடின் கலந்த உணவு பொருள்களைத் தடை செய்வதை முக்கியப் பணியாக கருதுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் முதல் நிகழாண்டு பிப்ரவரி மாதம் வரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் 91 டன் உணவு பாதுகாப்பு அலுவலா்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல 400 டன் புகையிலை பொருள்கள் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை தயாரித்த, விற்பனை செய்த தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் வரை 9 அவசர தடையாணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
பணி ஆணை: இதைத் தொடா்ந்து, தேசிய மற்றும் மாநில அளவில் செவிலியராக பயின்று பட்டம் பெற்று, செவிலியா்களுக்கான கலந்தாய்வில் பதிவு செய்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சோ்ந்த திருநங்கை தமிழ்ச்செல்விக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன், தேசிய நலவாழ்வுக் குழுமத்தில் திட்ட உதவியாளருக்கான பணி ஆணையை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், சிறப்பு அலுவலா் செந்தில்குமாா், பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.