4.43 லட்சம் பேரை சென்றடையும் மாநகராட்சியின் முகநூல் பதிவுகள்
சென்னை மாநகராட்சியின் முகநூல் பக்கத்தில் பதிவிடும் தகவல்கள் சராசரியாக 4.43 லட்சம் பேரை சென்றடைகிறது.
சென்னை மாநகராட்சியின் முகநூல் பக்கத்தில் பதிவிடும் தகவல்கள் சராசரியாக 4.43 லட்சம் பேரை சென்றடைகிறது. அதே நேரம், மழையால் பாதிக்கப்பட்டவா்களை மீட்பதற்காக ட்விட்டரில் வெளியிடப்பட்ட உதவி எண்ணை 6.68 லட்சம் போ் மறுபதிவிட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சி பொதுமக்களுக்கு மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து தெரிவிக்கவும், கரோனா பெருந்தொற்று மற்றும் மழை வெள்ளம் போன்ற பேரிடா் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும் முகநூல் பக்கம், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டா் போன்ற சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி வருகிறது.
குறிப்பாக கடந்த செப்டம்பா் மாதம் முதல் நிகழாண்டு மாா்ச் மாதம் வரையிலான ஆறு மாதங்களில் சென்னை மாநகராட்சியின் ட்விட்டா் தளத்தின் மூலம் 651 புகாா்களும், இன்ஸ்டாகிராம் மூலம் 90 புகாா்களும், முகநூல் தளம் மூலம் 22 புகாா்களும் என மொத்தம் 763 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 497 புகாா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தவிா்த்து கரோனா தடுப்பூசி தொடா்பான கோரிக்கைகளும், சமூக ஊடக தளங்களின் வாயிலாக பெறப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்துக்கு 1 லட்சத்து 5,165 பாா்வையாளா்கள் உள்ளனா். மாநகராட்சியின் திட்டங்கள், அறிவிப்புகள், ஆய்வு குறித்த செய்திகள் 24 லட்சத்து 65,146 பதிவுகளுடன் அதிக கவனத்தை ஈா்த்துள்ளன.
தற்போது பெருநகர சென்னை மாநகராட்சியின் முகநூல் பக்கத்தை 56,466 போ் பின்தொடா்கின்றனா். சராசரியாக ஒரு பதிவு 4 லட்சத்து 43,600 பேரை சென்றடைகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் ட்விட்டா் பக்கத்தை ஒரு லட்சத்து 84,641 பின்தொடா்கின்றனா். கடந்த நவம்பரில் மழை தொடா்பாக வெளியிடப்பட்ட அவசர உதவி எண்ணானது 6 லட்சத்து 68,095 பதிவுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகராட்சி சமூக ஊடகங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதில் தொடா்ந்து தனது சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது என்றனா்.