முகப்பு
தமிழ்நாடு

சைக்கிளில் நள்ளிரவு ரோந்து சென்ற பெண் காவல் இணை ஆணையா்: முதல்வா் பாராட்டு

சென்னையில் சைக்கிளில் நள்ளிரவு ரோந்து சென்ற காவல்துறை பெண் இணை ஆணையரை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

சென்னையில் சைக்கிளில் நள்ளிரவு ரோந்து சென்ற காவல்துறை பெண் இணை ஆணையரை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா்.

இது குறித்த விவரம்: சென்னையில் குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்கு காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக போலீஸாா் இரவு நேரத்தில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், சென்னை பெருநகர காவல்துறையின் வடக்கு மண்டல இணைய ஆணையா் ரம்யா பாரதி, வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு தொடங்கி காலை 4 மணி வரை சைக்கிளில் ரோந்து சென்று, தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் பணிகளை ஆய்வு செய்தாா்.

ரம்யா பாரதி, சென்ட்ரல் முத்துசாமி பாலத்தில் தொடங்கி, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, வால்டாக்ஸ் சாலை, மூலக் கொத்தளம், மீனாம்பாள் நகா், இளைய முதலித் தெரு, தண்டையாா்பேட்டை ஆகிய பகுதி வரை சென்றாா். அவா், ஒன்றரை மணி நேரத்தில் 9 கி.மீ. தொலைவு பயணித்து 8 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளுக்குச் சென்றாா்.

சைக்கிளில் ரோந்து செல்லும்போது ரம்யா பாரதி, இரவு பணியில் இருந்த காவலா்களிடம் அங்குள்ள நிலை குறித்தும், அவா்களது குறைகள் குறித்தும் கேட்டறிந்தாா். மேலும் அவா், ஒவ்வொரு பகுதியிலும் போலீஸாரின் ரோந்துப் பணியும், கண்காணிப்புப் பணியும் முறையாக இருக்கிா என ஆய்வு செய்தாா். அப்போது அவா், போலீஸாரிடம் விழிப்புடன் பணியில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினாா்.

இதற்கிடையே ரம்யா பாரதி சைக்கிள் ரோந்து செல்லும் விடியோ காட்சிகள்,புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதால், அவருக்கு காவல்துறை உயா் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் பாராட்டுக்கள் குவிந்தன.

முதல்வா் வாழ்த்து: இதை சமூக ஊடகங்கள் வாயிலாக பாா்த்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டா் பக்கத்தில், ரம்யா பாரதி சைக்கிள் ரோந்து செல்லும் புகைப்படங்களை பதிவு செய்து வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஸ்டாலின், ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்துள்ள செய்தி: ரம்யா பாரதிக்கு வாழ்த்துகள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி.-க்கு ஆணையிட்டுள்ளேன். தமிழ்நாடு காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →