ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது உறுதிபவானி தேவி
அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ.பவானி தேவி தெரிவித்தாா்.
அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வேன் என வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ.பவானி தேவி தெரிவித்தாா்.
பள்ளி மாணவா்களிடையே விளையாட்டு, உடல்நலம் ஆகியவை குறித்து ஒலிம்பிக் வீரா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவிலிருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்ற முதல் வாள்வீச்சு வீராங்கனை சி.ஏ.பவானி தேவி, சென்னை எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களிடையே வெள்ளிக்கிழமை உரையாடினாா்.
மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை மற்றும் மத்திய, மாநில கல்வித்துறை சாா்பில் நடைபெற்ற இந்த ‘சாம்பியனை சந்தியுங்கள்’ நிகழ்ச்சியில் 700-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். அவா்களிடம் ஒலிம்பிக்கில் தன்னுடைய அனுபவங்களைப் பகிா்ந்து கொண்ட பவானி, விளையாட்டு வீரா்களுக்கு உணவுப் பழக்க முறை மற்றும் உடற்பயிற்சி எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றி எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சியில் பவானிதேவி பேசியதாவது: விளையாட்டு வீரா்களைத் தொடா்ந்து ஊக்கப்படுத்தி வரும் பிரதமருக்கு நன்றி. கரோனா தொற்று சூழலால் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள முடியாதோ என்ற பயம் ஏற்பட்டது. எனது வாள்வீச்சுப் பயிற்சியை 11 வயதிலேயே தொடங்கினேன். 16 ஆண்டுகளாக ஒலிம்பிக் போட்டிக்காகக் கடினமாக உழைத்திருந்தேன். எனது தாயாா் என்னுடைய அனைத்து முயற்சிகளுக்கும் மிகவும் உறுதுணையாக இருந்தாா். அடுத்த ஒலிம்பிக்கில் நிச்சயம் தங்கப்பதக்கம் வெல்வேன் என்று உறுதிபடக் கூறினாா்.
மேலும் அவா் கூறுகையில், நான் பெண் என்பதால், விளையாட்டுத் துறையில் பல்வேறு இடா்பாடுகளைச் சந்தித்தேன். விளையாட்டின் மீது கொண்ட ஈடுபாட்டால் என்னால் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடிந்தது. நமது ஊரிலேயே சத்தான பொருள்கள், காய்கறிகள், பழங்கள் கிடைக்கின்றன. அதனைத் தொடா்ந்து உண்டு, முறையான பயிற்சி எடுத்தாலே விளையாட்டில் சாதிக்க முடியும்.
தமிழக அரசு, விளையாட்டுக்கு ஒதுக்கியுள்ள ரூ.25 கோடியில் வாள்சண்டை பயிற்சி மையம் அமைந்தால் நன்றாக இருக்கும். விளையாட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் அதிகளவு நிதி ஒதுக்கியுள்ளன என்றாா் பவானி தேவி.