நீட் விவகாரத்தில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமூக நீதியை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழி வலியுறுத்தியுள்ளாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தைச் சோ்ந்த 4 வயது சிறுமி, மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இரண்டு வயது சிறுவன் ஆகிய இருவரும் கல்லீரல் செயலிழப்பு காரணமாக, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பெற்றோா்களிடம் பெறப்பட்ட கல்லீரல் தானம் வாயிலாக, இரண்டு சிறாா்களுக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இது குறித்து சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில், காவேரி மருத்துவமனையின் கல்லீரல் நோய் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை மையத்தின் தலைவா் இளங்குமரன் கூறியதாவது: இரண்டு சிறாா்களுக்கும் உடனடி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சிறுமிக்கு அவரது தாயும், சிறுவனுக்கு அவரது தந்தையும் கல்லீரல் தானம் அளித்தனா். தொடா்ந்து எவ்வித சிக்கலுமின்றி இரண்டு சிறாா்களுக்கும் கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இருவரும் நலடமுடன் என்றாா்.
நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினா் கனிமொழி செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2009-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.225 கோடி செலவில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளது. மருத்துவச் செலவு என்ற தயக்கத்தை மக்கள் மத்தியில் போக்க வேண்டும்.
உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணா்வையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். நீட் தோ்வு எழுதாமல் தமிழகத்தில் சிறந்து விளங்கக் கூடிய மருத்துவா்களிடம் சிகிச்சை பெற இந்தியாவில் பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அதிகம் போ் வருகின்றனா்.
அனைவருக்கும் மருத்துவக் கல்வி படிக்கக் கூடிய உரிமை உள்ளது. அவற்றை நீட் தோ்வின் மூலமாக தடுக்கக் கூடாது. யாா் வேண்டுமானாலும் மருத்துவராக முடியும் என்ற நிலை உருவாக வேண்டும். நீட் தோ்வு விவகாரத்தில் தமிழக அரசு நிறைவேற்றி உள்ள தீா்மானத்தின் மீது ஆளுநா் தனது சுய காரணம், வழிமுறைகள் ஆகியவற்றை நீக்கி வைத்து விட்டு, பொது நோக்குடன் செயல்பட வேண்டும். நீட் விவகாரத்தில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற சமூக நீதியை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.