அவிநாசியில் போலி மருத்துவர் கைது: தனியார் மருத்துவமனைக்கு சீல்
அவிநாசியில் ஆய்வக படிப்பு முடித்து பொது மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை காவலர்கள் கைது செய்தனர். மேலும் ஆய்வகம், மருத்துவமனை மூடி சீல் வைக்கப்பட்டது.
அவிநாசி: அவிநாசியில் ஆய்வக படிப்பு முடித்து பொது மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை காவலர்கள் கைது செய்தனர். மேலும் ஆய்வகம், மருத்துவமனை மூடி சீல் வைக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிப்புதூரில் கே. எஸ். கிளினிக் என்ற தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அவிநாசி பகுதியை சேர்ந்த சுதா என்பவருக்கு சொந்தமான இந்த மருத்துவமனையில் புதுக்கோட்டை மாவட்டம், சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி என்பவரின் மகன் ஜெயக்குமார் (44), நோயாளிகளுக்கு பொது மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.
ஒரு வருட மருத்துவ ஆய்வகப் படிப்பு மட்டுமே படித்த இவர், கடந்த இரு ஆண்டுகளாக பொது மருந்துவம் பார்ப்பதாக வந்த புகாரையடுத்து, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பி. சக்தி, வட்டார சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், பரமன், வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் ஆகியோர் புதன்கிழமை மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், ஜெயக்குமார் போலி மருத்துவர் என உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி காவலர்கள் போலி மருத்துவர் ஜெயக்குமாரை கைது செய்தனர்.
மேலும், அனுமதியின்றி இயங்கி வந்த மருத்துவ ஆய்வக கூடம், மருத்துவமனை ஆகியவை, வட்டாச்சியர் ராகவி முன்னிலையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.