முகப்பு
தமிழ்நாடு

கைதி விக்னேஷ் மரணம்: அதிமுக வெளிநடப்பு

விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிடாததைக் கண்டித்து பேரவையில் இருந்து அதிமுக உறுப்பனிர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
கைதி விக்னேஷ் மரணம்: அதிமுக வெளிநடப்பு
பகிர்:


சென்னை: விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிடாததைக் கண்டித்து பேரவையில் இருந்து அதிமுக உறுப்பனிர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று விசாரணை கைதி விக்னேஷ் மரணம் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்தார். 

விளக்கத்தை ஏற்க மறுத்தும், விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்ற உத்தரவிடாததைக் கண்டித்தும் பேரவையிலிருந்து, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, விசாரணை கைதி விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயங்கள் இருந்துள்ளதால் அவரது மரணத்தில் மிகப்பெரிய சந்தேகம் உள்ளது. விக்னேஷ் வழக்கில் முரண்பட்ட தகவல்களை தமிழக அரசு கூறி வருகிறது. விக்னேஷ் தலை உள்ளிட்ட 13 இடங்களிலும் காயங்கள் இருந்துள்ளன. கால் எலும்பு முறிவு என பிரேத பரிசோதனை அறிக்கையில் உள்ளது.

சிபிஐயிடம் வழக்கை ஒப்படைத்தால்தான் விக்னேஷ் வழக்கில் உண்மை வெளியே வரும். இந்த வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டுமென்றால், சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படைக்க வேண்டும்.  தமிழக காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் இந்த வழக்கை விசாரித்தால், விசாரணை நேர்மையாக நடைபெறாது. 

தருமபுரம் ஆதினம் பட்டணப்பிரவேச நிகழ்ச்சிக்கு  திட்டமிட்டு அரசியல்நோக்குடன் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை ஆதினம் இது தொடர்பாக கருத்து தெரிவித்ததால் அவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர். அவர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

திமுகவின் ஓராண்டு ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. அண்டை மாநிலத்திலிருந்து கஞ்சா கொண்டு வந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. 

திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட  அறிவிப்புகளில் 70 சதவீதம் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்படுகின்றது.  இந்த ஓராண்டு கால திமுக அரசு திறமையற்ற அரசு என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.