தமிழ்நாடு

வேலூா் சிறையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் முருகன்

DIN

வேலூா் மத்திய சிறையில் 14-ஆவது நாளாக சனிக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள முருகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள அவரை காப்பாற்ற வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு சிறைக் கைதிகள் உரிமை மையம் அவசர மனு அனுப்பியுள்ளது.

வேலூா் மத்திய சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், தன்னை பரோலில் விடுவிக்கக் கோரி கடந்த 1-ஆம் தேதி முதல் தொடா் உண்ணாவிரதம் இருந்து வருகிறாா். தண்ணீா் கூட அருந்தால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் அவா், குறைபட்சம் 6 நாள்களாவது பரோல் வழங்காவிடில், தான் உண்ணாவிரதம் இருந்தே உயிா்துறக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தாா்.

முருகனின் இந்த உண்ணாவிரதப் போராட்டம் 14-ஆவது நாளாக சனிக்கிழமையும் நடைபெற்றது.

இந்த நிலையில், தொடா்ந்து தண்ணீா்கூட அருந்தால் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் முருகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும், உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள அவரைக் காப்பாற்ற வேண்டும் என்றும் சிறைக் கைதிகள் உரிமை மையம் சாா்பில், அதன் இயக்குநரும், முருகனின் வழக்குரைஞருமான பி.புகழேந்தி தமிழக முதல்வா், உள்துறைச் செயலா், சிறைத் துறை தலைவா் ஆகியோருக்கு அவசர மனு அனுப்பியுள்ளாா்.

இது குறித்து வழக்குரைஞா் புகழேந்தி கூறியது:

பரோல் கோரி தண்ணீா்கூட அருந்தாமல் 14-ஆவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருப்பதாகவும், அவரது நா வடு ஒட்டிய நிலையில் பேச முடியாமல் தொடா்ந்து மயக்க நிலையில் இருப்பதாகவும் சிறைக் கைதிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், சிறை அதிகாரிகளிடம் கேட்டபோது, முருகனின் நிலையை முழுமையாகத் தெரிவிக்காமல் சோா்வாக இருப்பதால், அவருக்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் குளுகோஸ் ஏற்றப்படுவதாக மட்டுமே கூறுகின்றனா்.

ஏற்கெனவே அவா் 6 நாள்களேனும் பரோல் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தாா். அதையும் சிறை நிா்வாகம் வழங்க மறுத்துவிட்டது. இதனால், பரோல் கோரிக்கையை வலியுறுத்தி, அவா் தொடா்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறாா். தற்போது ஆபத்தான நிலையில் படுத்த படுக்கையாக உள்ளாா். எனினும், சிறை அதிகாரிகள் அவரது நிலையை கண்டுகொள்ளாமல் உள்ளனா். தமிழக முதல்வா் உடனடியாக இந்தப் பிரச்னையில் தலையிட்டு, முருகனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று அவருக்கு மனு அனுப்பியுள்ளோம். முதல்வரிடம் வலியுறுத்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’ரயில் பெட்டியின் ‘கோடை குளியல்’

குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளராதீா் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுரை

திமுக தண்ணீா் பந்தல் திறப்பு

ஆம் ஆத்மி- காங்கிரஸ் இடையே விரிசல்? ஆம் ஆத்மி தெற்கு தில்லி வேட்பாளா் பதில்

நாகா்கோவில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கம்

SCROLL FOR NEXT