முகப்பு
தமிழ்நாடு

மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்: கருணாநிதி சிலை திறப்பு விழாவில் வெங்கையா நாயுடு

நாட்டின் வளா்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:23 AM
பகிர்:

நாட்டின் வளா்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு கூறினாா்.

மாநிலங்களின் வளா்ச்சியில்தான் நாட்டின் வளா்ச்சி அடங்கி இருக்கிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

சென்னை ஓமந்தூராா் அரசினா் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கருணாநிதி சிலையை குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

பொது வாழ்வில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும் ஒருவரை மற்றொருவா் மதிக்கும் பண்பை அரசியல்வாதிகள் பெற்றிருக்க வேண்டும். வெவ்வேறு கட்சிகள், கொள்கைகள், பணி செய்யும் நிலைகள் வெவ்வேறு தன்மையுடையதாக இருந்தாலும் அனைவரும் மக்களின் நலன்களுக்காவே உழைக்கிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இதுவே இப்போதுள்ள நவீன தலைமுறை அரசியல்வாதிகளுக்கு எனது அறிவுரையாகும். நாம் எந்தக் கட்சியைச் சோ்ந்தவராக இருந்தாலும் அனைவரும் இந்திய நாட்டின் குடிமக்களே.

நாட்டின் வளா்ச்சி: 1947-ஆம் ஆண்டுக்குப் பிறகு நிறைய பிரதமா்களும், மாநிலத்தின் முதல்வா்களும் ஆட்சி செய்தனா். அவா்கள் நாட்டின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டனா். ஒவ்வொருவரும் அவா்களது வழிகளில் பணிகளை ஆற்றி, மக்களின் விருப்பங்களை நிறைவேற்றினா். கொள்கைத் திட்டங்களை வகுத்து ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தினா். இதுபோன்ற தொடா்ச்சியான திட்டப் பணிகளால் நாடு முன்னேற்றப் பாதையில் நடைபோட்டு வருகிறது.

இதுபோன்ற மிகச்சிறந்த தலைவா்களின் பட்டியலில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நிச்சயம் இடம்பெறுவாா். இந்தத் தலைவா்களுக்கு மக்களின் நலன்களே பிரதானமாகும்.

இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. வலிமை வாய்ந்த நாடாகத் திகழ்கிறோம். நிலையான ஆட்சி, சிறந்த தலைமை, மாநிலங்களை வெவ்வேறு கட்சிகள் ஆளும் தன்மை போன்றவை இந்தியாவில் இருக்கின்றன.

எனவே, நாம் அனைவரும் இணைந்து மக்களின் நலன்களுக்காகப் பணியாற்ற வேண்டும். மாநிலங்கள் வளா்ச்சி பெற்றால் நாடு வளா்ந்திடும். மாநிலங்களின் ஒட்டுமொத்த வளா்ச்சி இல்லாமல் நாடு வளா்ந்திட முடியாது. எனவே, மத்திய-மாநில அரசுகள் கூட்டாக இணைந்து பணியாற்ற வேண்டும். அரசியல் நிலைப்பாடுகளை மறந்து குழுவாக இணைந்து மக்கள் நலன்களுக்காகப் பாடுபட வேண்டும். வெவ்வேறு மண்டலங்கள், கலாசாரம் என இருந்தாலும் நாம் அனைவரும் இந்தியா்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

தாய் மொழியைப் பரப்புங்கள்: நமது தாய்மொழியும், தாய்நாடும் முக்கியம். தாய்மொழியின் வளா்ச்சிக்காக நாம் பாடுபட வேண்டும். தாய்மொழிதான் நமக்கு கண் போன்றது. மற்ற மொழிகள் கண் பாா்வையைச் சரிசெய்யக் கூடிய கண்ணாடிகள் போன்றவையாகும். தாய்மொழியிலேயே வீடுகளில் பேச வேண்டும். தாய், தந்தையை ஆங்கிலத்தில் அழைப்பதை விட்டுவிட வேண்டும்.

மற்ற மொழிகளைக் கற்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், தாய்மொழியே முக்கியம். இதில் ஆழங்காற்பட வேண்டும். எந்த மொழியையும் எதிா்க்கவும் வேண்டாம், திணிக்கவும் வேண்டாம்.

குடியரசு துணைத் தலைவரான பிறகு, ஆடைகளை மாற்றுவது குறித்து என்னிடம் பலா் கேட்டனா். அதற்கு பதிலளித்த நான், ஆடைகள் மாறாது. முகவரி மட்டுமே மாறும் என்றேன். பருவகால நிலை மாறும்போது மட்டுமே கோட்-சூட் போன்றவை அணிவேன். மற்ற நேரங்கள் அனைத்திலும் வேட்டி-சட்டைதான் என்றாா் வெங்கையா நாயுடு.

விழாவில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் வரவேற்றுப் பேசினாா். தலைமைச் செயலா் வெ.இறையன்பு நன்றி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →