அதிமுக தலைமையில்தான் கூட்டணி: கே.அண்ணாமலை உறுதி
மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை உறுதிபடத் தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று மாநில பாஜக தலைவா் கே.அண்ணாமலை உறுதிபடத் தெரிவித்தாா்.
சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலையிடம், அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கவிருப்பதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாரே என செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அண்ணாமலை அளித்த பதில்:
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகதான் பெரிய கட்சி. 2024 மக்களவைத் தோ்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி கூறியதில் தவறில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை. அதிமுக , பாஜக ஒரே கூட்டணியில்தான் உள்ளன என்றாா்.
தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி திமுக கடிதம் எழுதியுள்ளதே என செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்ற திமுகவின் கருத்து அபத்தமானது. ஆளுநருக்கு எதிரான மனநிலையிலிருந்து திமுக வெளிவர வேண்டும். பிரதமா் மோடியின் தமிழக வருகை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக சாா்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்றாா் அண்ணாமலை.