சென்னை மெரீனாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையை மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில் நாட்டின் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான நடைபாதை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. மாற்றுத் திறனாளிகளும் கடல் அலைகளை கண்டுகளிக்க ஏதுவாக சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 14 லட்சத்தில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ள நிரந்தரப் பாதையானது 263 மீ நீளமும், 3 மீ அகலமும் கொண்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் இடையில் நின்று செல்வதற்காக 11 மீட்டா் நீளத்தில், 6 மீட்டா் அகலத்தில் சாய்தள வசதியுடன் ஒரு பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இதனால் மாற்றுத் திறனாளிகள் மிகவும் மகிழ்ச்சியாக வந்து செல்கின்றனர். மாற்றுத் திறனாளிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களும் இந்த பாதை அமைத்து கொடுத்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பாதையை மற்றவர்களும் பயன்படுத்தி வருவது அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத் திறனாளிகளும் அவர்களுடன் உதவிக்கு வருபவர்கள் மட்டும் இந்த பாதையை பயன்படுத்த அரசு ஆவண செய்ய வேண்டும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இதனை மக்கள் நீதி மய்யமும் இதனை வலியுறுத்தியுள்ளது.
இந்த பாதையை மாற்றுத் திறனாளிகளும் அவர்களுக்கு உதவியாக வருபவர்கள் மட்டுமே பயன்படுத்தவும் மற்றவர்கள் செல்வதைத் தடுக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒரு சிறந்த நோக்கத்தோடு போடப்பட்ட இந்தப்பாதை பழுதடைந்து விடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். பொதுமக்களும் இதை உணர்ந்து அந்த பாதையை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று கட்சியின் மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.