சேலம்: சேலம் கோட்டை பகுதியில் பழைய புத்தகக் கடை வைக்க மீண்டும் அனுமதிக்கக் கோரி மாநகராட்சி அலுவலகம் முன்பு புத்தக கடை வியாபாரிகள் குடும்பத்தோடு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் கோட்டை ஹபீப் தெருவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பழைய புத்தகங்களை விற்பனை செய்யும் கடைகள் இயங்கி வந்தன. இதன் மூலம் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பழைய புத்தகங்கள் மற்றும் அரிதாகக் கிடைக்கும் பழைய புத்தகங்களை வாங்கி பயன்படுத்தி வந்தனர்.
14 கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் இந்த கடைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் விரும்பத்தகாத செயல்கள் நடப்பதாகவும் கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட 14 கடைகளையும் கடந்த மே மாதம் மாநகராட்சி சார்பில் அதிரடியாக அகற்றப்பட்டு சீர் செய்யப்பட்டது.
இந்த நிலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கடைகளை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரி பாதிக்கப்பட்ட பழைய புத்தகக் கடை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் முதல் அதிகாரிகள் வரை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று குடும்பத்தோடு சேலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமுறை தலைமுறையாக பழைய புத்தகங்களை விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்ததாகவும் ஆனால் தற்போது மாநாட்சி நிர்வாகம் அதனை அதிரடியாக அகற்றிவிட்டதாகவும் கூறிய அவர்கள், கட்டுப்பாடுகளுடன் கடை வைத்துக்கொள்ள அனுமதி கேட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சம்பந்தப்பட்ட இடத்தில் கடை வைக்க அனுமதி அளிக்காவிட்டால் தாங்கள் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுவதாகவும் கூறி கோஷங்கள் எழுப்பினர்.
இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரியிடம் மனு கொடுப்பதற்காக அழைத்துச் சென்றனர்.
புத்தகக் கடை வியாபாரிகளின் இந்த போராட்டத்தினால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.