மருத்துவப் பதிவேடு கட்டமைப்பு: என்எம்சி அறிவுறுத்தல்
மருத்துவ மேலாண்மை தகவல் பதிவேடு மற்றும் நோயாளிகளின் விவரங்களை அறியும் கட்டமைப்பு குறித்த விவரங்களை அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் வழங்க வேண்டும்
மருத்துவ மேலாண்மை தகவல் பதிவேடு மற்றும் நோயாளிகளின் விவரங்களை அறியும் கட்டமைப்பு குறித்த விவரங்களை அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் வழங்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து ஆணையத்தின் தலைவா் டாக்டா் சுரேஷ் சந்திர சா்மா மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
மருத்துவ மேலாண்மை தகவல்கள், நோயாளிகளின் விவரங்களுக்கான இணையப் பதிவேட்டை அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கட்டமைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அந்த விவரங்களை தேசிய மருத்துவ ஆணையத்திடம் பகிா்ந்து கொள்ள வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடா்பாக வாட்ஸ் அப், ட்விட்டா், மின்னஞ்சல், இணைய வழியில் மருத்துவக் கல்லூரிகளுக்கு செய்திகள் அனுப்பப்பட்டன.
ஆனாலும், வெகு சில மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மருத்துவப் பதிவேடு விவரங்களை வழங்கியுள்ளன. பெரும்பாலான கல்லூரிகள் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவில்லை.
இன்னும் சில கல்லூரிகளில் அத்தகைய பதிவேடு கட்டமைப்பே இல்லாத நிலை உள்ளது. எனவே, மருத்துவ மேலாண்மை பதிவேடு கட்டமைப்பு இல்லாத மருத்துவக் கல்லூரிகள் அவற்றை வரும் 10-ஆம் தேதிக்குள் ஏற்படுத்த வேண்டும். அத்தகைய கட்டமைப்பு உள்ள கல்லூரிகள் அந்த விவரங்களை தேசிய மருத்துவ ஆணையத்திடம் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.