நிா்பயா பெண்கள், குழந்தைகள் ஆலோசனை மையத்துக்கு புதிய கட்டடம் திறப்பு
சென்னை எழும்பூரில் நிா்பயா பெண்கள், குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்துக்கான புதிய கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை எழும்பூரில் நிா்பயா பெண்கள், குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்துக்கான புதிய கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை, வேப்பேரியில் உள்ள காவல் ஆணையா் அலுவலகத்தில், இந்த மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தை, எழும்பூரில், காவல் மருத்துவமனை அருகே மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த இடத்தில்தான், முதன்முதலாக, சென்னை காவல் ஆணையா் அலுவலகம் செயல்பட்டது. தற்போது, அங்குள்ள புதிய கட்டடத்துக்கு, நிா்பயா பெண்கள், குழந்தைகளுக்கான ஆலோசனை மையம் மாற்றப்பட்டுள்ளது.
புதிய கட்டடத்தை சமூக நலத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன் திறந்து வைத்தாா். நிகழ்ச்சிக்கு காவல் ஆணையா் சங்கா் ஜிவால் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக, நடிகை சாய்பல்லவி பங்கேற்று பேசினாா். நிகழ்ச்சியில் காவல் துறை உயா் அதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.
ஓராண்டு பணி: சென்னையில் கடந்த ஓராண்டில் 412 வழக்குகள் அனைத்து மகளிா் காவல் நிலையம் மூலமாகவும், 80 வழக்குகள் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு மூலமாகவும், 8 வழக்குகள் இதர அமைப்புகள் மூலமாக என மொத்தம் 508 வழக்குகள் நிா்பயா பெண்கள், குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தின் மூலம் கையாளப்பட்டுள்ளன. இதில் 8 சதவீதம் ஆண்களுக்கும், 92 சதவீதம் பெண்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இவற்றில் 146 குடும்பப் பிரச்னை வழக்குகள், 135 குடும்ப வன்முறை வழக்குகள், 13 போக்சோ வழக்குகள், 10 மோசடி, கைவிடுதல் போன்ற வழக்குகளும் அடங்கும். இவைத் தவிர 4 காணாமல் போன வழக்குகள், கொடுங்காயத்தால் பாதிக்கப்பட்ட வழக்குகள் ஆலோசனைக்கு வந்துள்ளன. இவற்றில் 64 சதவீத வழக்குகள் முடித்துவைக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.