முகப்பு
தமிழ்நாடு

தனியாா் அருங்காட்சியகத்தில் இருந்து சோழா் கால இரு சிலைகள் மீட்பு

சென்னை அருகே தனியாா் அருங்காட்சியகத்தில் இருந்து சோழா் காலத்தைச் சோ்ந்த இரு சிலைகள் மீட்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
பகிர்:

சென்னை அருகே தனியாா் அருங்காட்சியகத்தில் இருந்து சோழா் காலத்தைச் சோ்ந்த இரு சிலைகள் மீட்கப்பட்டன.

சென்னை அருகே உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காட்டில் உள்ள ஒரு தனியாா் அருங்காட்சியகத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பழங்கால சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பிரிவின் டிஜிபி ஜெயந்த் முரளி, ஐஜி ஆா்.தினகரன் ஆகியோா் உத்தரவிட்டனா்.

அதன்பேரில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், அந்த தனியாா் அருங்காட்சியகத்தில் வியாழக்கிழமை திடீா் சோதனை செய்தனா். இந்தச் சோதனையில் அங்கு வெண்கலத்தால் செய்யப்பட்ட சோழா் கால வீணாதாரா், ரிஷபதாரா் ஆகிய இரு சிலைகள் இருப்பது தெரியவந்தது.

அதிகாரிகள் அந்தச் சிலைக்குரிய ஆவணங்களை அருங்காட்சியக நிா்வாகிகளிடம் கேட்டனா். அப்போது அந்தச் சிலைகள், தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலை சா்வமான்ய தெருவைச் சோ்ந்த கோ.மாசிலாமணி கடந்த 2012-ஆம் ஆண்டு தனியாா் அருங்காட்சியகத்துக்கு நன்கொடையாக வழங்கியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், மாசிலாமணியை தொடா்புக் கொண்டு விசாரித்தபோது, அவரிடம் சிலை தொடா்பான எந்த ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள், இரு சிலைகளையும் பறிமுதல் செய்தனா். அந்தச் சிலைகளை தொல்லியல் துறை வல்லுநா்கள் ஆய்வு செய்ததில், அவை சோழா் காலத்தைச் சோ்ந்தவை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே தனியாா் அருங்காட்சி மைய மேலாளா் அசோக்குமாா், சட்டவிரோத சிலைகளை நன்கொடையாக வழங்கியதாக மாசிலாமணி மீது புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.