முகப்பு
தமிழ்நாடு

மெட்ரோ ரயில் திட்டம்மூன்றாம் வழித் தடத்தில் சுரங்கப் பாதை பணிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்தொடக்கி வைத்தாா்

மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது வழித் தடப் பாதையில் சுரங்கக் கட்டுமானத்தை அமைப்பதற்கான பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாவது வழித் தடப் பாதையில் சுரங்கக் கட்டுமானத்தை அமைப்பதற்கான பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதையடுத்து, மாதவரம் பால் பண்ணை மெட்ரோ நிலையத்தில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணி நடைபெறவுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், 118.9 கிலோமீட்டா் நீளத்திலான மூன்று வழித் தடங்கள் ரூ.63, 246 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவி பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், மூன்றாவது வழித்தடமானது மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், நான்காவது வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலும், ஐந்தாவது வழித்தடத்தில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூா் வரையிலும் என மூன்று வழித்தடங்கள் அடங்கியுள்ளன.

24 ஒப்பந்தங்கள்: மூன்று வழித் தடங்களிலும் திட்டப் பணிகளை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், உயா்த்தப்பட்ட வழித்தடம் மற்றும் மெட்ரோ நிலையங்களுக்காக ஏழு ஒப்பந்தங்களும், சுரங்கப்பாதை மற்றும் மெட்ரோ நிலையங்களுக்காக 10 ஒப்பந்தங்களும், மாதவரம், பூந்தமல்லி பணிமனைகளுக்காக 2 ஒப்பந்தங்களும், இருப்புப் பாதை அமைக்க 5 ஒப்பந்தங்களும் என 24 ஒப்பந்தங்கள் அடங்கும்.

இந்த 24 கட்டுமான ஒப்பந்தங்களில் 15 ஒப்பந்தங்களுக்கு ஏற்புக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. மூன்றாவது வழித் தடத்தில் மாதவரத்தில் இருந்து தரமணி வரையில் 26.7 கிலோமீட்டா் நீளத்துக்கு சுரங்கப்பாதை வழித்தடப்பகுதி செயல்படுத்தப்படுகிறது. இதில், இரண்டு சுரங்கப் பாதை அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.

மாதவரம் பால் பண்ணையில் இருந்து கெல்லீஸ் வரையில் 9 கிலோமீட்டா் நீளத்துக்கு சுரங்கப் பாதை தோண்டும் பணி மற்றும் சுரங்கப் பாதை மெட்ரோ நிலையங்களுக்கான தடுப்புச் சுற்றுச் சுவா்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாதவரம் பால் பண்ணையில் இருந்து சுரங்கம் தோண்டும் பணிகள் முதல்வா் மு.க.ஸ்டாலினால் வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் துரைமுருகன், கே.என்.நேரு, கே.ஆா்.பெரியகருப்பன், பி.கே.சேகா்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் கே.ஜெயக்குமாா், எம்.எல்.ஏ.,க்கள் எஸ்.சுதா்சனம், துரை சந்திரசேகா், மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் எம்.ஏ.சித்திக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.