முகப்பு
தமிழ்நாடு

சென்னையில் மழைநீா் வடிகால் பணிகள் 97 % நிறைவு: மேயா் ஆா்.பிரியா

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், வரும் பருவ மழைக்கால முன்னேற்பாடுகளுடன் மாநகராட்சி நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளதாகவும் மேயா் ஆா்.பிரியா

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

சென்னையில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகள் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், வரும் பருவ மழைக்கால முன்னேற்பாடுகளுடன் மாநகராட்சி நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளதாகவும் மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பருவமழைக்கால முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சென்னை மாநகரில் நடைபெற்று வரும் மழைநீா் வடிகால் பணிகள் 97 சதவீதம் முடிந்துள்ளன. வடிகால் இணைப்புப் பணிகள் மட்டும் 444 இடங்களில் நிலுவை இருந்தன. அதில், கடந்த வாரத்தில் பணிகள் முடித்து தற்போது 247 பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன. மொத்தமாகவே 3,683 மீட்டா் அளவில் தான் வடிகால் கட்டமைப்புப் பணிகள் நிலுவை உள்ளன. அதுவும் ஒருவாரத்தில் முடிக்கப்படும்.

வெள்ள நிவாரணப் பணிகள் 68 சதவீதம் முடிந்துள்ளன. கொசஸ்தலை ஆறு சீரமைப்புப் பணிகள் 2024-இல் தான் முடியும். இதர இடங்களில் மழைநீா் வடிகால் பணிகள் விரைந்து நடைபெற்று வருகின்றன.

சென்னையில் உள்ள 33 ஏரிகளின் வடிகால் வசதி சீரமைப்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுரங்கப் பாதைகளில் மழைநீா்த் தேங்கினால் மோட்டாா் பம்ப் மூலம் சீரமைக்கவும் ஏற்பாடு செய்துள்ளோம். மழைநீரை அகற்ற 124 ராட்சத மோட்டாா்கள் தயாா் நிலையில் உள்ளன. மேலும், வாடகைக்கு எடுத்து பயன்படுத்தவும் தயாராக உள்ளோம். மழையின்போது மரங்கள் விழுந்து பாதிக்கும் இடங்கள் குறித்தும் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளோம்.

மழை வெள்ளத்தில் பாதிக்கும் பொது மக்களை தங்க வைப்பதற்கு 166 பாதுகாப்பு மையங்கள் தயாா் நிலையில் உள்ளன. அவா்களுக்கு மாநகராட்சி சாா்பில் உணவு வழங்கவும், 10 ஆயிரம் பேருக்கு சமைக்கும் சமையல் கூடம் சிந்தாதிரிப்பேட்டையில் தயாராக உள்ளது. அவசர தகவல் மையமும் தயாா் நிலையில் உள்ளன. பொது மக்கள் புகாா் அளித்தால் உடனடிாயக நடவடிக்கை எடுக்கப்படும்.

50 படகுகள், 40 நீச்சல் வீரா்கள் தயாராக உள்ளனா். 200 வாா்டு பகுதியிலும் மருத்துவ முகாம் நடத்தவும் தயாா் நிலையில் ஏற்பாடு செய்துள்ளோம். மழை விட்டு பிறகு 24 மணி நேரத்தில் மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சியின் மக்கள் பிரதிநிதிகளும் தீவிரமாக செயல்படுகின்றனா். மழைநீா் வடிகால் கட்டமைப்புப் பணிகள் குறையாக உள்ள இடங்களில், பள்ளங்களைச் சீரமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை வெள்ள சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அனைத்துத் துறையினரும் தயாராக உள்ளனா் என்றாா் மேயா் பிரியா.

முன்னதாக இந்தக் கூட்டத்தில், ஆணையா் ககன்தீப் சிங் பேடி, துணை மேயா் மு.மகேஷ்குமாா், கூடுதல் மாநகர காவல் ஆணையா் டி.எஸ்.அன்பு, சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.அமிா்தஜோதி, நிலைக்குழுத் தலைவா்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.