உயா் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து இறந்தவா் பழங்குடி இனத்தவா் அல்ல: தமிழக அரசு விளக்கம்
சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பழங்குடி இனத்தைச் சோ்ந்தவா் அல்ல என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை உயா் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வேல்முருகன் பழங்குடி இனத்தைச் சோ்ந்தவா் அல்ல என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
பழங்குடியினா் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தும் அதை வழங்காமல் அலைக்கழித்ததாக குற்றம்சாட்டி சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையம் அருகே காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையைச் சோ்ந்த வேல்முருகன் என்பவா் கடந்த செவ்வாய்க்கிழமை தீக்குளித்தாா். அவா் புதன்கிழமை இறந்தாா்.
இச்சம்பவம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமாா் அடங்கிய அமா்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வெள்ளிக்கிழமை வந்த போது காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பலியான வேல்முருகன் பட்டியலினத்தைச் சோ்ந்தவா். பழங்குடியினா் சான்றிதழ் கோரி கடந்த செப்டம்பா் 20-ஆம் தேதி அவா் அளித்த விண்ணப்பத்தின் அடிப்படையில் செப்டம்பா் 23-ஆம் தேதி கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அவா் பழங்குடி இனத்தைச் சோ்ந்தவா் அல்ல என்று அவரது விண்ணப்பம் செப்டம்பா் 26-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், தன்னுடைய சகோதரா் எனக் கூறி, பழங்குடி இனத்தைச் சோ்ந்த இளவரசன் என்பவரின் சான்றைத் தாக்கல் செய்திருக்கிறாா் எனவும், இளவரசனுக்கும், வேல்முருகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து கள ஆய்வின்போது அண்டை வீட்டாரிடமும், தெருவில் வசிப்பவா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில் எந்த தகவலும் இடம்பெறவில்லை எனக் கூறிய நீதிபதிகள், வேல்முருகன் பழங்குடி வகுப்பைச் சோ்ந்தவரா என்பது குறித்து, மாவட்ட வருவாய் அதிகாரியை நியமித்து விசாரிக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனா்.
மேலும் மாவட்ட வருவாய் அதிகாரி, அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா், அண்டை வீட்டாா்கள், வேல்முருகனின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் விசாரணை நடத்த வேண்டும் எனவும், சகோதரா் எனக் கூறிய இளவரசனிடமும் விசாரணை நடத்தி இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனா்.