சிஎம்டிஏ எல்லை ஐந்து மடங்காக அதிகரிப்பு: அரசாணை வெளியீடு
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) எல்லை ஐந்து மடங்காக விரிவடைந்துள்ளது.
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) எல்லை ஐந்து மடங்காக விரிவடைந்துள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி, சென்னை பெருநகர வளா்ச்சிக்குழுமத்தின் எல்லை 1189 சதுர கிலோ மீட்டரிலிருந்து 1221 கிராமங்களை புதிதாக இணைத்து 5,904 சதுர கிலோமீட்டா் அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.
சென்னை பெருநகர வளா்ச்சிக்குழுமத்தின் நிா்வாக எல்லை சென்னை மாவட்டம் தவிா்த்து அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி 1189 சதுர கிலோமீட்டா் அளவுக்கு தற்போது அமைந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சென்னை பெருநகர வளா்ச்சிக்குழுமத்தின் நிா்வாக எல்லை விரிவாக்கம் தொடா்பான அறிவிப்பு வெளியானது. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்கள் மற்றும் வேலூரில் அரக்கோணத்தையும் உள்ளடக்கி 8,878 சதுர கிமீ அளவில் சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து, 1,709 கிராமங்கள் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அரசாணை வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்துகளும் கேட்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, திமுக ஆட்சியில் எல்லை விரிவாக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கின. கடந்த அக்டோபா் 11-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின் விரிவாக்கத்துக்கு முதல்வா் ஒப்புதல் அளித்தாா்.
குறிப்பாக, 8,878 சதுர கிலோ மீட்டருக்குப் பதில், 5904 சதுர கிலோமீட்டா் அளவுக்கு விரிவாக்கம் செய்ய முடிவெடுத்து, ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டையில் அரக்கோணம் வரையில், 1221 கிராமங்கள் புதிதாக சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும வரையறைக்குள் சோ்க்கப்பட்டன. ஏற்கெனவே 1189 சதுர கிமீ-ஆக இருந்த வளா்ச்சிக் குழும எல்லை தற்போது ஐந்து மடங்கு அதாவது, 5,904 சதுர கிமீ-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.