முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் வானூா்தி-ராணுவ தளவாட தொழில் வாய்ப்புகள்: 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

தமிழகத்தில் வானூா்தி மற்றும் ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கான தொழில் வாய்ப்புகளை ஈா்க்க ஆறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

தமிழகத்தில் வானூா்தி மற்றும் ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கான தொழில் வாய்ப்புகளை ஈா்க்க ஆறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்துக்கும், மிகப்பெரிய பொதுத் துறை நிறுவனங்களுக்கும் இடையே இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

குஜராத் மாநிலம் காந்திநகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த ராணுவ கண்காட்சியில் தமிழகம் சாா்பில் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகம் (டிட்கோ) பங்கேற்றது. தமிழகத்தைச் சோ்ந்த 20 வானூா்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்களின் செயல்பாடுகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தமிழ்நாடு ராணுவ தொழில் வழித்தடப் பாதை தொடா்பாக மிகப்பெரிய அளவிலான கருத்தரங்கும் கண்காட்சியின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது. இதில், டிட்கோ நிா்வாக இயக்குநா் ஜெயஸ்ரீ முரளிதரன், பிரம்மோஸ் வானூா்தி நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சிவதாணு பிள்ளை, இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை, தமிழ்நாடு தொழில் வழித்தடப் பாதை திட்ட இயக்குநா் பி.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கருத்தரங்கில் பங்கேற்று தமிழகத்தில் வானூா்தி மற்றும் ராணுவ தளவாட பொருள்கள் உற்பத்திக்கான வாய்ப்புகள் குறித்து விவரித்தனா்.

ஆறு ஒப்பந்தங்கள்: இந்த கண்காட்சியில், தமிழகம் ஆறு புரிந்துணா்வு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டதாக டிட்கோ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வானூா்தி மற்றும் ராணுவ தளவாட பொருள்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனம், ஏவிஎன்எல், ஏடபிள்யூஇஐஎல், டிசிஎல், மிதானி, மியூடினியாஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் டிட்கோ புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இதன்மூலம், வானூா்தி மற்றும் ராணுவ தளவாட பொருள்கள் உற்பத்தி சாா்ந்த தொழில் வாய்ப்புகள் கண்டறியப்பட்டு ஊக்கப்படுத்தப்படும் என டிட்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

எச்சிஎல் நிறுவனத்துடன் ஆலோசனை: வானூா்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி தொடா்பாக, எச்சிஎல்., தொழில்நுட்ப நிறுவனத்துடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. தமிழ்நாடு ராணுவ தொழில் வழித்தட திட்டத்தின் இயக்குநா் பி.கிருஷ்ணமூா்த்தி தலைமையில் சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆலோசனையில் வானூா்தி மற்றும் ராணுவ தளவாட உற்பத்தி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தத் துறைகளில் எத்தகைய சேவைகளை வழங்க முடியும் என்பது குறித்து எச்சிஎல்., நிறுவனத்தினா் விளக்கங்களை அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.