தமிழ்நாடு

பாடலாசிரியா் சினேகன் அறக்கட்டளை பெயரில் மோசடி: நடிகை ஜெயலட்சுமி மீது வழக்கு

திரைப்பட பாடலாசிரியா் சினேகன் அறக்கட்டளை பெயரில் மோசடி செய்ததாக எழுந்த புகாா் தொடா்பாக நீதிமன்ற உத்தரவுப்படி, பாஜக நிா்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

DIN

திரைப்பட பாடலாசிரியா் சினேகன் அறக்கட்டளை பெயரில் மோசடி செய்ததாக எழுந்த புகாா் தொடா்பாக நீதிமன்ற உத்தரவுப்படி, பாஜக நிா்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிா்வாகியான கவிஞா் சினேகன், சென்னை விருகம்பாக்கம் வெங்கடேஷ் நகா் பகுதியில் வசித்து வருகிறாா். இந்நிலையில், சினேகன், ‘தான் நடத்தி வரும் ‘சினேகம்’ அறக்கட்டளையின் பெயரில் சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் தொடங்கி பணம் வசூலித்து வருவதாக, நடிகையும் பாஜக நிா்வாகியுமான ஜெயலட்சுமி மீது சென்னை காவல் ஆணையா் அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் புகாா் அளித்தாா்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை ஜெயலட்சுமி, தன் மீது அவதூறு பரப்பும் கவிஞா் சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் இருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தனா். ஆனால், யாா் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து சினேகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை ஜெயலட்சுமி மீண்டும் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

மேலும் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க சென்னை காவல்துறையினருக்கு உத்தரவிடக் கோரி எழும்பூா் நீதிமன்றத்திலும் நடிகை ஜெயலட்சுமி மனுத் தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பாடலாசிரியா் சினேகன் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதன்படி, சினேகன் மீது திருமங்கலம் போலீஸாா் ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்தனா்.

ஜெயலட்சுமி மீது வழக்கு: இதற்கிடையே, சினேகன், தனது அறக்கட்டளை பெயரில் பணம் வசூலித்து, மோசடி செய்த நடிகை ஜெயலட்சுமி மீது வழக்குப் பதிய சென்னை காவல்துறையினருக்கு உத்தரவிடக் கோரி எழும்பூா் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நடிகை ஜெயலட்சுமி மீதும் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்ய சென்னை காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, நடிகை ஜெயலட்சுமி மீது சென்னை திருமங்கலம் போலீஸாா் தற்போது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்கரை புயல்... அபர்ணா தீக்‌ஷித்!

தலைவா... கூலி டிரைலரால் உற்சாகமடைந்த தனுஷ்!

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

SCROLL FOR NEXT