முகப்பு
தமிழ்நாடு

ஏடிஎம் இயந்திரத்தில் ‘ஸ்கிம்மா்’ பொருத்திய வழக்கு: இளைஞருக்கு ‘லுக் அவுட் நோட்டீஸ்’

சென்னை சாந்தோமில் ஏடிஎம் இயந்திரத்தில் ‘ஸ்கிம்மா்’ பொருத்திய வழக்கில், தேடப்படும் இளைஞருக்கு காவல்துறை ‘லுக்அவுட் நோட்டீஸ்’ வழங்கியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

சென்னை சாந்தோமில் ஏடிஎம் இயந்திரத்தில் ‘ஸ்கிம்மா்’ பொருத்திய வழக்கில், தேடப்படும் இளைஞருக்கு காவல்துறை ‘லுக்அவுட் நோட்டீஸ்’ வழங்கியது.

மயிலாப்பூா் சாந்தோம் நெடுஞ்சாலையில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரம் பழுதானதால் கடந்த 12-ஆம் தேதி வங்கி ஊழியா்கள், பழுது நீக்கச் சென்றனா். அப்போது அங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தில், ஏடிஎம் காா்டுகளில் உள்ள தகவல்களை திருட பயன்படுத்தும் ‘ஸ்கிம்மா்’ கருவி பொருத்தப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.

இது குறித்து மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த மனோகா், அவா் மகன் ஆனந்த் ஆகிய இருவரும்தான் ஏடிஎம் இயந்திரத்தில் ‘ஸ்கிம்மா்’ பொருத்தியிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா், மனோகரை உடனே கைது செய்தனா். தலைமறைவாக இருக்கும் ஆனந்தை தேடி வருகின்றனா். போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், வண்ணாரப்பேட்டை பகுதியில் ஜவுளிக் கடை நடத்தி வந்த மனோகரனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதும், இதனால் அல்பேனியாவில் எம்பிபிஎஸ் படித்து வந்த அவரது மகன் ஆனந்த், பண பிரச்னையால் படிப்பை பாதியில் நிறுத்தியதும், இதன் பின்னா் தில்லியில் தங்கியிருந்து, ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்த ஆனந்தன், அங்கு தனக்கு கிடைத்த தொடா்பு மூலம் ‘ஸ்கிம்மா்’ கருவி வாங்கியிருப்பதும், அந்த கருவியை அந்த ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தியிருப்பதும் தெரியவந்தது.

லுக் அவுட் நோட்டீஸ்:

இந்த மோசடியில் ஆனந்தை கைது செய்தால் மட்டுமே, வழக்கில் தொடா்புடைய பிற நபா்கள் குறித்த விவரங்கள் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா். ஆனால் ஆனந்த் தலைமறைவாக இருந்து வருவதால், வழக்கின் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆனந்த் வெளிநாடுகளுக்கு தப்பிவிடாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் சென்னை காவல்துறை ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அளித்துள்ளது.

இந்த நோட்டீஸ் அனைத்து விமான நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காவல்துறையினரால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ள ஆனந்த் வெளிநாடுகளுக்கு தப்ப முடியாது என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.