முகப்பு
தமிழ்நாடு

குளிர்பானம் அருந்தி மாணவர் உயிரிழப்பு: புதுவை சிறப்பு மருத்துவக் குழுவினர் ஆய்வு

குளிர்பானம் அருந்திய பள்ளி மாணவர் உயிரிழப்பு தொடர்பாக, புதுவை அரசு நியமித்த 3 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவினர் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை  ஆய்வு செய்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:15 AM
பகிர்:

குளிர்பானம் அருந்திய பள்ளி மாணவர் உயிரிழப்பு தொடர்பாக, புதுவை அரசு நியமித்த 3 பேர் கொண்ட சிறப்பு மருத்துவக் குழுவினர் காரைக்காலில் செவ்வாய்க்கிழமை  ஆய்வு செய்தனர்.

காரைக்கால் நேரு நகரில் உள்ள தனியார் பள்ளியில்  8}ஆம் வகுப்பு படித்து வந்த பால மணிகண்டன், அதே வகுப்பைச் சேர்ந்த மற்றொரு மாணவியின் தாயார், காவலாளி மூலம் அளித்த குளிர்பானத்தைக் குடித்தார். வீட்டுக்கு வந்த பின்னர் உடல்நிலை பாதித்து அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

மாணவி ஒருவரின் தாயார் சகாய ராணி விக்டோரியா என்பவர் குளிர்பான பாட்டிலை வழங்கியதும், அதில் விஷம் கலந்திருப்பதையும் விசாரணையில் அறிந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

காரைக்கால் மருத்துவமனையில் மாணவருக்கு உரியச் சிகிச்சை தரப்படவில்லை என அவரது குடும்பத்தினரும், பல்வேறு கட்சியினரும் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்தும், இந்த வழக்கை உயர்மட்ட விசாரணைக்கு உட்படுத்தவேண்டுமெனக்கோரி வருகிற 9-ஆம் தேதி காரைக்காலில்  முழு அடைப்புப்  போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுவை அரசு, புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை குழந்தைகள் நலத் தலைமை மருத்துவர் முரளி தலைமையில் மருத்துவர்கள் பாலச்சந்தர், ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவை, காரைக்காலில் மாணவர் பால மணிகண்டனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆய்வு செய்யக் குழு அமைத்தது.

இக்குழுவினர் செவ்வாய்க்கிழமை காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வந்தனர். மருத்துவக் கண்காணிப்பாளர் கண்ணகி மற்றும் மருத்துவர்களிடம் இதுதொடர்பாக கருத்துகளைக் கேட்டறிந்தனர்.

ஆய்வுக்குப் பின் அக்குழுவில் இடம் பெற்றிருந்த  மருத்துவர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியது:

நலவழித்துறை செயலரின் அறிவுறுத்தலின்பேரில் 3 பேர்  கொண்ட மருத்துவக் குழுவினர், காரைக்காலில் பாலமணிகண்டன் என்கிற பள்ளி மாணவர் உயிரிழப்பு தொடர்பாக மருத்துவத்துறையினருடன் ஆலோசனை நடத்தினோம்.

மாணவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது முதல் இறுதி வரை நடைபெற்ற சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர், செவிலியர் மற்றும் பிற பணியாளர்கள், நிர்வாக நிலையில் நடத்தப்பட்ட பணிகள் குறித்து கருத்துகளைக் கேட்டறிந்தோம். 

இதுதொடர்பான பல விவரங்களைச் சேகரித்துள்ளோம். மாணவருக்கு அளித்த சிகிச்சை, மேலும் என்ன செய்திருக்கலாம் என்கிற ஆலோசனைகள் உள்ளடக்கி அறிக்கையாக சுகாதாரத்துறை இயக்குநரிடம் வழங்குவோம் என்றார்.

உடற்கூறு ஆய்வு முடிவு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 

இதுகுறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. எனினும் இது நீதித்துறை தொடர்பானது என்பதால் வெளியே தெரிவிக்க இயலாது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →