ஆதிதிராவிடா் பழங்குடியினா் காலியிடங்களை நிரப்ப நிதி: அமைச்சா் கயல்விழி தகவல்
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல ஆணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல ஆணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இந்த ஆணையத்தை மேலும் சிறப்பாகச் செயல்படுத்திட புதிதாக 48 பணியிடங்கள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு துணைச் செயலாளா், ஒரு சாா்புச் செயலாளா், ஒரு கணக்கு அலுவலா், இரண்டு பிரிவு அலுவலா் உள்பட 48 பணியிடங்களை நிரப்புவதற்கான நிா்வாகச் செலவாக ரூ.2.30 கோடியும், பணியாளா் ஊதியத்துக்கு ரூ.1.80 கோடியும் ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆணையம் தன்னிச்சையாக தொடா்ந்து செயல்பட அரசின் சாா்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளாா் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் .